வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: பொதுமக்கள் போராட்டம்

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த விவரம்:  வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டதாக சென்னையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் சுமார் 2,500 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து அவர்கள், வியாழக்கிழமை, மின்ட் பாரத் திரையரங்கு அருகே திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 
நாம் தமிழர் கட்சி போராட்டம்: கொளத்தூர் பெரியார்நகர் எஸ்.வி.எம். பாடசாலை பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்குள் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ரியாஸ் என்பவர், தங்களது கட்சி முகவருக்கு மதிய உணவு கொண்டு வந்தாராம். 
அவ்வாறு வரும்போது  அவர், மோட்டார் சைக்கிளில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தாண்டி, அத்துமீறி நுழைந்தாராம். இதைப் பார்த்த அங்கிருந்த துணை ராணுவப் படை வீரர், ரியாஸ் மீது லத்தியால் லேசாகத் தாக்கினராம். இதைக் கண்டித்து அந்தக் கட்சியினர், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார், அவர்களைச் சமாதானப்படுத்தி, அங்கிருந்து கலைந்துபோகச் செய்தனர். 
இதேபோல, மீனம்பாக்கம் பாண்டியன் தெருவில் ஆதிதிராவிடர் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில்,  வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டிருப்பதாகக் கூறி சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
மேலும், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களை போலீஸார் உடனுக்குடன் கட்டுப்படுத்தினர்.
வாக்களிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்
சென்னை மாவட்டத்தின் சில பகுதிகளில் உரிய ஆவணங்கள் இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சென்னை மாவட்டத்தின் 3 மக்களவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 5,216 பேரும், பெண் வாக்காளர்கள் 19 லட்சத்து 59,862 பேரும், திருநங்கைகள் 988 பேரும் என 38 லட்சத்து 66,066 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலையொட்டி,  வாக்காளர்களுக்கான பூத் சிலிப்புகள் வழங்கும் பணி கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. ஆனால், பெரும்பாலான வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படவில்லை.
தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் என நம்பி, வாக்காளர்கள் வியாழக்கிழமை வாக்குச்சாவடிக்குச் சென்றனர். எனினும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
குறிப்பாக, திரைப்பட நடிகர் ரமேஷ்கண்ணாவிடம் உரிய ஆவணங்கள் இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், வாக்களிக்க முடியாமல் போனது. இதுகுறித்து விடியோ வெளியிட்டுள்ள ரமேஷ்கண்ணா, ஒரே வீட்டில் வசிக்கும் எனது மனைவி பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது. எனது பெயர் இல்லை.  இதனால், எனது வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது யார் தவறு? என்று தனது ஆதங்கத்தை அதில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த பெண் கூறுகையில், கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் வாக்களித்தேன். அதன் பிறகு அண்மையில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை அறிந்து கொண்டு புதுப்பித்தேன். 
அதற்கான ஒப்புகைச் சீட்டும் பெற்றேன். இதைத் தொடர்ந்து, ஆன்லைனிலும்  எனது பெயர் உள்ளதா என பலமுறை சோதித்து பார்த்தேன். அதிலும் சரியான தகவல் கிடைக்கவில்லை. 
எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் என்னால் வியாழக்கிழமை வாக்களிக்க முடியவில்லை. அதேவேளையில் அதே முகவரியில் உள்ள எனது கணவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் தேர்தல் ஆணையம், இதுபோன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com