தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் புகார்

மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அடுக்கடுக்காக புகார் தெரிவித்தன.


மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அடுக்கடுக்காக புகார் தெரிவித்தன.
திமுக புகார்: தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை திமுக வழக்குரைஞர் அணிச் செயலாளர் கிரிராஜன் சந்தித்துப் புகார் மனு ஒன்றை அளித்தார். 
அதில், வாக்குச்சாவடி மையங்களில் 3 மணி மேல் கண்காணிப்பு கேமராக்களைச் செயலிழக்கச் செய்துவிட்டு, அதிமுகவினர் கள்ள ஓட்டுகள் போடத் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
காங்கிரஸ் புகார்: தலைமைச் செயலகத்தில் சத்யபிரத சாகுவை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் தாமோதரன் சந்தித்து புகார் மனு அளித்தார்.
அதில், தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயங்கவில்லை என்று தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளன. 
எந்தவித தாமதமும் செய்யாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியமைக்க வேண்டும். இதனால், வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும். கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க முடியாமல் முதியோர்களும், பெண்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் பந்தல் அமைக்கப்படவில்லை. குடிநீர் வசதி செய்யப்படவில்லை. இதனால், வாக்குப்பதிவு சதவீதம் குறைய வாய்ப்பு இருக்கிறது. கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 5 கிலோ மீட்டார் தூரம் பயணித்து பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒய்.எம்.சி. பள்ளியில் வாக்களிக்க வேண்டியுள்ளது. இதனை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
பாமக புகார்: தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்த அறிக்கையில் கூறியிருந்தது: 
 திண்டிவனம் வாக்குச்சாவடியில் நான் வாக்களிக்கச் சென்றபோது  வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்த பகுதியில் போதிய வெளிச்சம் இல்லை. வாக்களிக்க சிரமமாக இருந்தது. இன்னும் பல பகுதிகளில் இதே நிலை காணப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சம் கிடைக்க தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com