வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

பெண்கள் விடுதி நடத்துவோருக்கு கடும் கட்டுப்பாடுகள்: உரிமம் இல்லாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை

DIN | Published: 06th December 2018 04:10 AM


சென்னையில் பெண்கள் விடுதி நடத்துபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
உரிமம் இல்லாமல் விடுதிகள் நடத்தினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சிறார் விடுதிகள், ஆதரவற்றோர் விடுதிகள், பெண்கள் விடுதிகள் என பல விடுதிகள் அரசு மற்றும் தனியார்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பாலியல் தொல்லைகள் ஏற்படுவதாகவும் ஏராளமான புகார்கள் பதிவாகியுள்ளன. 
பல தனியார் அமைப்புகள் அரசு அனுமதியின்றி இதுபோன்ற விடுதிகளை நடத்தி வருவதாகவும், அங்கு தங்கியுள்ள மாணவ மாணவிகள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை ஆதம்பாக்கத்தில் பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைத்து படம்பிடித்த விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். 
இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சென்னையில் பெண்கள் விடுதி நடத்துபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து, மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள கட்டுப்பாடுகள் விவரம்: 
பதிவு பெற்ற விடுதிகளின் பெயர் பட்டியல், விடுதிகளின் முகவரியோடு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் இணையதளத்தில் வெளியிடப்படும். விடுதி நடத்துவோர் மாவட்ட சமூக நல அலுவலரிடம் பதிவு சான்று, உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாமல் விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். உரிய அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டடங்களில் மட்டுமே விடுதி, காப்பகம் அமைக்க வேண்டும். 
பெண்கள் விடுதியில் பெண் காப்பாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். விடுதியில் பணியாற்றுபவர்கள் காவல்துறையின் நன்னடத்தை சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். 
அதேபோன்று விடுதிக் காப்பாளர், துணைக் காப்பாளர் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க வேண்டும். சிறுவயது குழந்தைகள், இளம்பெண்களை விடுமுறை நாள்களில் வீட்டுக்கு அனுப்பும்போது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் மட்டுமே அனுப்ப வேண்டும்.
விடுதிக் காப்பாளர்கள் கவனத்துக்கு...: இருபாலர் விடுதியில் ஆண் மற்றும் பெண்களுக்கு என தனித்தனி கட்டடம் இருக்க வேண்டும். விடுதிக் காப்பாளர் மற்றும் துணைக் காப்பாளர்கள் விடுதியில் தான் தங்க வேண்டும்; வெளியில் தங்கக்கூடாது. தாழ்ப்பாள்கள் போன்றவை சரியாக இருக்க வேண்டும். உரிய வருகைப் பதிவேட்டை பராமரிப்பது அவசியம். 50-க்கும் அதிகமான பெண்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் கட்டாயமாக கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட வேண்டும். 
உரிமம் பெறாத விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள், உடனடியாக விடுதியை விட்டு வெளியேறவும். 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பதிவின்றி செயல்படும் எந்த விடுதியிலும் பெண்கள், குழந்தைகளை தங்க வைக்க வேண்டாம் என அதில் கூறியுள்ளார்.
ரகசிய கேமராக்களை கண்டறிய...
பெண்கள் தங்கும் விடுதிகளில் ரகசிய கேமராக்களை கண்டறிய Hidden Camera Detector App செயலிகளைப் போன்ற பல செயலிகள் உள்ளன. அவற்றில் உள்ளபடி தங்களது செல்லிடப்பேசியில் பொருத்தி கண்காணித்து புகார்கள் அளிக்கலாம். மேலும் விடுதியில் குறைகள் மற்றும் உரிமம் பெறாத விடுதிகள் குறித்து 9444841072 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-ஆப்) எண்ணுக்கு புகைப்படங்களுடன் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

More from the section

சார்-பதிவாளர்கள் வீடுகளில்  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.5.90 லட்சம் பறிமுதல்
குப்பைகளைத் தரம் பிரித்து  அளிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்: மாநகராட்சி அறிவுறுத்தல்
மெட்ரோ ரயிலில் விரைவில் வைஃபை வசதி
ரயிலில்  தவறி விழுந்த  ஆயுதப்படை காவலர் சாவு
ரயில் மோதி பள்ளி ஆசிரியர் சாவு