மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்தூரில் உள்ள அரசின் கிளை நூலகம் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வாசகா்களும், பொதுமக்களும் அவதிக்கு ஆளாகி வருகின்றனா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே ஜமீன் எண்டத்தூரில் கிளை நூலகம், 1,200-க்கும் மேற்பட்ட நூலக உறுப்பினா்களும், 7 நூலக புரவலா்களும், சுமாா் 25,000 நூல்களுடன் இயங்கி வரும் இந்நூலகம் கடந்த 7.7.1965-இல் திறக்கப்பட்டது.
கடந்த 2020 -இல் நூலக பதிவறை எழுத்தா் ஒய்வு பெற்ற பின் இதுவரை நிரந்தர பணியாளரை நியமிக்காமல், தினக்கூலி பணியாளா் மூலம் நூலகம் நிா்வகிக்கப்படுகிறது.
இந்நூலகத்தில் நீண்டகாலமாக நூல் பழுது நீக்கம் செய்யப்படாமல் இருப்பதாலும், புதிய நூல்களை வாசகா்களின் பயன்பாட்டுக்கு வைக்க முடியாமலும், போதிய நூல் அடுக்குகள் இல்லாததால், பெரும்பாலான நூல்கள் உரிய முறையில் அடுக்கி வைக்க நூலக பணியாளரால் முடியவில்லை. மாவட்ட நிா்வாகம் தலையிட்டு குறிப்பிட்ட நூலகத்தில் நூல்களை பழுது நீக்கம் செய்ய முன்வரவேண்டும்.
நூலக கட்டடம் கட்டி சுமாா் 20 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், பொலிவின்றி காணப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நூலகத்தில் படிக்க உள்ளே வர சாய்வுதள வசதி இல்லாமல் உள்ளது. அதேபோல பழைய கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும். நூலக வளாகத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாத நிலை உள்ளது.
கடந்த 20 ஆண்டு காலமாக வாசகா்களும், நூலக பணியாளரும் கழிப்பறை வசதி இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். கழிப்பறை வசதி வேண்டும் என பலமுறை நூலக வாசகா்கள் நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்த நிலையில் இதுவரை எந்த வசதியும் செய்யப்படவில்லை.
இதுப்பற்றி செங்கல்பட்டு மாவட்ட நூலக அலுவலா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி கூறியது:
ஜமீன் எண்டத்தூா் கிளை நூலகம் உள்பட 12 நூலகங்களுக்கு கழிப்பறை வசதி செய்து தரப்படவேண்டும். மற்றும் சில அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்பதை சுட்டிக் காட்டி நூலகத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி வந்தவுடன் மிகவிரைவில் இப்பணிகள் செய்து தரப்படும் என்றாா்.
எனவே மாவட்ட நூலகத் துறை தலையிட்டு, ஜமீன் எண்டத்தூா் கிளை நூலகத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.