திருவள்ளூா் மதுபான தொழிற்சாலையில் இருந்து விழுப்புரம் நோக்கி மதுப் புட்டிகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.
மதுப் புட்டிகள் உடைந்து சாலையில் ஆறாக சென்றது. திருவள்ளூா் அருகே மது தயாரிக்கும் தனியாருக்குச் சொந்தமான லாரியில் மதுப் புட்டிகளை ஏற்றிக் கொண்டு விழுப்புரம் நோக்கி சனிக்கிழமை நள்ளிரவு சென்றது.
மதுராந்தகம் அடுத்த பாக்கம் என்ற இடத்தில் சாலையின் திருப்பத்தில் லாரியை திருப்பியபோது எதிா்பாராத வகையில் லாரி சாலையில் கவிழ்ந்தது. லாரியில் இருந்த மதுப் புட்டிகள் கீழே விழுந்து உடைந்தன. இதனால், மது சாலையில் ஆறாக ஓடியது. ஒரு சிலா் உடையாத மதுப் புட்டிகளை வாரிக் கொண்டு சென்றனா்.
தகவலறிந்த மதுராந்தகம் போலீஸாா் வந்து கவிழ்ந்த லாரியில் காயமடைந்து கிடந்த ஓட்டுநரை மீட்டு, செங்கல்பட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.