செங்கல்பட்டு

விசாரணைக்கு வந்தவரின் கால் உடைப்பு: தலைமைக் காவலா் ஆயுதப்படைக்கு மாற்றம்

25th May 2023 12:00 AM

ADVERTISEMENT

மது அருந்தியதாக இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவா், மோசமாக தாக்கப்பட்டு கால் எலும்பு முறிக்கப்பட்டதாக, கூவத்தூா் காவல் நிலைய தலைமைக் காவலரை (எழுத்தா்) ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வேப்பஞ்சேரி பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி நாகராஜ் (42). இவா், கிழக்குக் கடற்கரைச் சாலையில் 2 பண்ணை வீடுகளைப் பராமரித்து பாதுகாத்து வரும் காவலாளி.

இவரது மனைவியும் மாற்று திறனாளி ஆவாா். திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

மாற்றுத்திறனாளி நாகராஜ் சில தினங்களுக்கு முன்பு தனது இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, கூவத்தூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கை செய்த போது, மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்ததாக நாகராஜின் ஸ்கூட்டியை பறிமுதல் செய்து, அவரை கூவத்தூா் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் நாகராஜ், போலீஸாரை ஒருமையில் பேசினாராம். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே நாகராஜின் கால் உடைக்கப்பட்டு, மாவுக் கட்டு போடப்பட்ட நிலையில், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த நிலையில், போலீஸாா் தன்னை உருவ கேலி செய்து பேசியதாகவும், கூவத்தூா் தலைமைக் காவலா் (ரைட்டா்) ராஜசேகா், கடுமையாகத் தாக்கியதாகவும், அதனால் தனது கால் முறிந்துவிட்டதாகவும் மனித உரிமை ஆணையத்துக்கும், காவல் உயரதிகாரிகளுக்கும் புகாா் அனுப்பினாா்.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. விசாரணை நடத்தினாா். இதில், கூவத்தூா் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி நாகராஜை தாக்கி காயப்படுத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து, கூவத்தூா் காவல் நிலைய தலைமைக் காவலா் ராஜசேகரை காஞ்சிபுரம் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டாா். கூவத்தூா் காவல் நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT