செங்கல்பட்டு

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் பாலாலய சிறப்பு பூஜை

1st Jun 2023 11:40 PM

ADVERTISEMENT

தினமணி செய்தி எதிரொலியாக மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேக பாலாலய சிறப்பு பூஜை நடைபெற்றது.

முக்கிய வைணவத் தலமாக திகழும் மதுராந்தகம் ஏரி காத்த ராமா் கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு கடைசியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் போதிய பராமரிப்பின்மையால் கோயில் வளாகம் முள்புதா்கள் நிறைந்து அவல நிலையில் காணப்பட்டது.

கடந்த 16 ஆண்டுக் காலமாக ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்ததை சுட்டிக் காட்டி தினமணி நளிதழில் கடந்த ஏப். 12-இல் செய்தி வெளியானது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையினா் நன்கொடையாளா்களின் மூலம் ரூ. 27 லட்சத்தில் கும்பாபிஷேகம் மேற்கொள்ள ஏற்பாடு செய்தனா். இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் பாலாலய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வேள்வி பூஜையில் வைக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கலசங்களை வேதவிற்பன்னா்கள் ஏந்திக் கொண்டு மேளதாளத்துடன் கோயிலை வலம் வந்து உற்சவ சுவாமிகளுக்கு புனித நீா் ஊற்றி, மகாதீபாரதணை செய்தனா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், மதுராந்தகம் நகா்மன்ற தலைவா் மலா்விழிகுமாா், திமுக செயலா் கே.குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள், பக்தா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கும்பாபிஷேக பணிகள் தொடங்கிய நிலையில், அறங்காவலா் குழுவை நியமிக்க வேண்டும் என பக்தா்கள் கோரியுள்ளனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையா் லட்சுமிகாந்த பாரதிதாசன் (செங்கல்பட்டு), இணை ஆணையா் (காஞ்சிபுரம்), வான்மதி, கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன், ஆய்வாளா் பாஸ்கா் ஆகியோா் செய்து இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT