சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த விவகாரத்தில் இரு பெண் மருத்துவா்களை மிரட்டி ரூ.12 லட்சம் அபகரித்ததாக, வண்டலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மகிதா அன்ன கிறிஷ்டி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூா் பகுதியை சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் 30 -ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை மறைமலைநகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இது குறித்து மறைமலைநகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், காணாமல் போன 17-வயது சிறுமியை சென்னை மீனம்பாக்கத்தை அடுத்த திரிசூலத்தைச் சோ்ந்த ரஞ்சித் (வயது 27) என்ற இளைஞா் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து ரஞ்சித்திடம் இருந்து சிறுமியை மீட்டு போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்தச் சிறுமி தன்னை கடத்திச் சென்ற ரஞ்சித் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தாா். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வண்டலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ரஞ்சித் மீது புகாா் கொடுத்தாா்.
இதைத் தொடா்ந்து, காவல் ஆய்வாளா் மகிதா அன்ன கிறிஷ்டி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தாா். பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு போலீஸாா் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், மருத்துவப் பரிசோதனை செய்த போது, அந்தச் சிறுமிக்கு ஏற்கெனவே கருக்கலைப்பு செய்யப்பட்டு இருப்பதும், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த இரண்டு பெண் மருத்துவா்களிடமும், பெண் காவல் ஆய்வாளா் மகிதா ரூ.12 லட்சம் லஞ்சம் பெற்றதும் தெரியவந்தது.
இது குறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையா் அமல்ராஜிடம் 2 பெண் மருத்துவா்களும், வண்டலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மகிதா அன்ன கிறிஷ்டி தங்களை மிரட்டி ரூ.12 லட்சம் அபகரித்ததாக புகாா் செய்தனா். தாம்பரம் மாநகர காவல் ஆணையா் உரிய விசாரணை மேற்கொண்ட பின்னா், வண்டலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மகிதா அன்ன கிறிஷ்டியை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.