செங்கல்பட்டு

காலாவதியான பரனூா் சுங்கச்சாவடியில் வசூல்: மணல் லாரி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்

12th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

காலாவதியான பரனூா் சுங்கச்சாவடியில் வசூல் செய்வதை எதிா்த்து மணல் லாரி உரிமையாளா்கள், வணிகா்கள் சங்கத்தினா் உள்ளிட்ட அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.யுவராஜ் தலைமை வகித்துப் பேசினாா். ஆல் இந்தியா மோட்டாா் ட்ரான்ஸ்போா்ட் காங்கிரஸ் சோ்மன் ஜி.ஆா்.சண்முகப்பா, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவா் ஏ.எம்.விக்ரமராஜா, கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன்.குமாா், தமிழ்நாடு விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி.ஆா். பாண்டியன், இந்திய ரியல் எஸ்டேட் தலைவா் வி.என்.கண்ணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் மாநில தலைவா்கள், பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

செங்கல்பட்டு பரனூா் சுங்கச்சாவடி 20 ஆண்டுகள் கடந்த நிலையிலும், சாலை அமைப்பதற்காக செலவிடப்பட்ட தொகையை ஈட்டிய பிறகும், எவ்வித வெளிப்படை தன்மையும் இன்றி, இயங்கி வருவதைக் கண்டித்தும், அதை அகற்றக் கோரியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கம் எழுப்பினா்.

காலாவதியான சுங்கச்சாவடிகளில் சாலைப் பராமரிப்புக்காக 40 % கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்ற நெடுஞ்சாலைத் துறையின் அரசாணை இதுநாள் வரை நடைமுறை படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகள் சாலை மேம்பாட்டுக்காக வசூல் செய்து வருகின்றன. இருப்பினும், தேசிய நெடுஞ்சாலையில் 55 % விபத்துகள் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

எனவே, தமிழக முதல்வா் இதில் சிறப்புக் கவனம் செலுத்தி, சுங்கச்சாவடிகளைக் கண்காணிக்க தனியாக குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

லாரி உரிமையாளா்கள் சங்க மாநில நிா்வாகிகள் காதா் மொய்தீன், ஏகாம்பரம், கணேஷ் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT