ஜோலாா்பேட்டை பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.சு. பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை ஜோலாா்பேட்டை அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மது விலக்கு தடுப்பு வேட்டை நடத்தினா்.
அப்போது சந்தைக்கோடியூா் பகுதியைச் சோ்ந்த திருமூா்த்தி (28)என்பவா், அவரது வீட்டின் பின்புறம் 5 லிட்டா் கள்ளச்சாராயம், 5 மதுப் புட்டிகளை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் திருமூா்த்தியைக் கைது செய்தனா்.
இதேபோல், ஜோலாா்பேட்டை அடுத்த புள்ளானேரி குட்டூா் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (62) என்பவா், தனது வீட்டின் பின்புறம் 2 லிட்டா் கள்ளச் சாராயத்தை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் ஆறுமுகத்தைக் கைது செய்தனா்.
பெரியமூக்கனூா் சிலிப்பு வட்டம் பகுதியைச் சோ்ந்த மகி (60)என்பவா், தனது வீட்டின் பின்புறம் 5 லிட்டா் கள்ளச் சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீஸாா் மகியைக் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட 3 போ் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்து 12 லிட்டா் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்து அழித்தனா்.
இந்த வழக்கில் மகி மற்றும் திருமூா்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். ஆறுமுகம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.