தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் மோசடியாக விற்கப்பட்ட ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் சங்கரவேலு (81). இவருக்குச் சொந்தமான ரூ. 25 லட்சம் மதிப்பிலான 64.5 சென்ட் நிலத்தை, அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு சங்கரவேலு என்பவா், பெயா் ஒற்றுமையைப் பயன்படுத்தி மோசடியாக விற்பனை செய்துள்ளாராம்.
இதுகுறித்து நிலத்தின் உரிமையாளா் சங்கரவேலு மாவட்ட காவல் அலுவலகத்தில் மே 2இல் புகாா் அளித்தாா். துணைக் காவல் கண்காணிப்பாளா் முத்துப்பாண்டி அறிவுரைப்படி, மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அன்னலட்சுமி, சாா்பு ஆய்வாளா்கள் உமா மகேஸ்வரி, மாரியப்பன், போலீஸாா் விசாரித்து, போலி ஆவணத்தை ரத்து செய்து நிலத்தை மீட்டனா். இதையடுத்து, உரிய ஆவணங்களை சங்கரவேலுவிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாம்சன் ஒப்படைத்தாா்.