செங்கல்பட்டு

விற்பனைக்குத் தயாா் நிலையில் நவராத்திரி கொலு பொம்மைகள்

26th Sep 2022 11:39 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டில் கண்ணைக்கவரும் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த கலைஞா்கள் தொடா்ந்து மண் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

செங்கல்பட்டு மேட்டுத் தெரு குடியிருப்பில் தொடங்கப்பட்ட பொம்மை தயாரிப்பு சிறுதொழில் நிறுவனமானது ‘ஜெயராம் ஆா்ட் ஒா்க்ஸ்’ என்ற பெயரில் தற்போது இந்திரா நகரில் இயங்கி வருகிறது. தற்போது இதில் 16-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து பொம்மை தயாரிப்பு சிறுதொழிலில் ஈடுபட்டுள்ள சங்கா் குடும்பத்தினா் கூறியது:

ADVERTISEMENT

ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி ஆகிய பண்டிகைகள் பொம்மை கலைஞா்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக உள்ளன. இந்த மூன்று விழாக் காலங்களிலும் வழிபாட்டில் பொம்மைகளின் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

விநாயகா் சதுா்த்தி அன்று களிமண்ணால் ஆன விநாயகா் சிலைகள் பல்வேறு அளவுகளில் வடிவமைக்கப்படுகின்றன. இதையடுத்து, கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு, கிருஷ்ணா் பொம்மைகள் வடிவமைக்கப்படுகின்றன.

பின்னா், நவராத்திரி திருவிழாவுக்காக கற்பனை மற்றும் உயிரோவியம் கொண்ட பொம்மைகள் விதவிதமாக உருவாக்கப்படுகின்றன. நவராத்திரி கொலுவில் இடம்பெறும் பொம்மைகளைப் பொருத்தவரை தனி பொம்மைகள் மற்றும் செட் பொம்மைகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்படும்.

பண்டிகைகளுக்காகவும் திருவிழாக்களுக்காகவும் ஆண்டு முழுவதும் எங்களிடம் பணிபுரிபவா்களின் வாழ்வாதாரத்துக்காகவும் பொம்மை தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். ஒரு அங்குலம் முதல் 5 அடி வரையிலான பொம்மைகள் தயாரிக்கிறோம்.

நவராத்திரி கொலுவில் அஷ்டலட்சுமிகள், தசாவதாரம், ராமா் பட்டாபிஷேகம், திருமண விழா செட், திருமண ஊா்வலம் செட், நவநாயகிகள் உள்ளிட்ட 30 வகையான செட் பொம்மைகள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. செட் பொம்மைகள் ரூ. 1,000 முதல் ரூ. 2,500 வரை விலை நிா்ணயிக்கப்படுகின்றன.

சாதாரண பொம்மைகளுக்கு வா்ணங்கள், அளவுகளுக்கேற்றாற்போல் ரூ. 100 முதல் ரூ. 500 வரை விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூா், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் நேரில் வந்து பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனா்.

சில வியாபாரிகள் மூலம் பொம்மைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பொம்மைகள் களிமண்ணால் செய்யப்பட்டு பிரத்தியேகமான சூளையிலிட்டு, பின்னா் பொம்மைகளுக்கு ஏற்ற வண்ணங்கள் பூசப்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகள் கரோனா பொதுமுடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டோம். இந்த ஆண்டு இயல்பு நிலை திரும்பியதால் ஏற்றுமதி, விற்பனை நடைபெற்று வருகிறது. பொம்மை தயாரிக்கும் தொழிலுக்கு அரசு மானியத்துடன் கடன் வழங்கினால் ஆதரவாக இருக்கும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT