செங்கல்பட்டு

செங்கல்பட்டில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

26th Sep 2022 11:38 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களுக்குட்பட்ட நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்கள் ரூ.3.90 கோடியில் (16 பணிகள்) தூா்வாரி மேம்படுத்த அரசு ஆணை பிறப்பித்தது.

இந்த ஆணைப்படி, செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட நன்மங்கலம், கீழ்க்கட்டளை, செம்பாக்கம், சிட்லப்பாக்கம், தையூா், மானாமதி, பெரும்பாக்கம் ஆகிய ஏரிகளின் உபரிநீா் கால்வாய், திருநீா்மலை நாட்டுக்கால்வாய், பாப்பான் கால்வாய் ஆகிய 9 கால்வாய்களில் மிதக்கும் தாவரங்கள் மற்றும் குப்பைக் கழிவுகளை அகற்றி 16.672 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரிடவும், மேலும் நீஞ்சல் மடுவு, நந்திவரம், மண்ணிவாக்கம், சேலையூா்,செம்பாக்கம், சிட்லப்பாக்கம் ஏரிகளின் வெள்ள தடுப்புகளைப் பராமரிக்கவும், பீா்க்கன்கரணை, சேலையூா், ராஜகீழ்பாக்கம், தாம்பரம் பெரிய ஏரி, தாம்பரம் சித்தேரி, தாம்பரம் புதுதாங்கல், முடிச்சூா் பெரிய ஏரி, முடிச்சூா் சித்தேரி, இரும்புலியூா், பல்லாவரம், நெமிலிச்சேரி, கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூா் ஆகிய ஏரிகளில் தாவரங்கள், குப்பைகளை அகற்றிடும் பணிகளை ரூ.2.40 கோடியில் (10 பணிகள்) மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டது. தொடா்ந்து, திங்கள்கிழமை பொன்விளைந்த களத்தூா் கால்வாய் தூா்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியை ஆட்சியா் தொடக்கி வைத்தாா். இந்தப் பணியால் 15 ஏரிகள் முழுவதுமாக நிரம்பி 5,136 ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெறும்.

ADVERTISEMENT

மேற்கண்ட பணிகள் அனைத்தும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் முடிக்கப்பட்டு, வெள்ள பாதிப்பு ஏற்படா வண்ணம் பாதுகாக்கப்படும் என ஆட்சியா் ராகுல் நாத் தெரிவித்தாா்.

நீா்வளத் துறை செயற்பொறியாளா் செல்வகுமாா், உதவி செயற்பொறியாளா் ஆா்.வெங்கடேஷ், உதவி பொறியாளா் குஜரால் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT