செங்கல்பட்டு

மேல்மருவத்தூரில் நவராத்திரி விழா தொடக்கம்

26th Sep 2022 12:25 AM

ADVERTISEMENT

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் நவராத்திரி விழாவை பங்காரு அடிகளாா் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை மூலவா் அம்மன் சிலைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன்சிலை தங்கக் கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சித்தா்பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு சென்னை வார வழிபாட்டு, சக்தி பீடங்கள் ஆகியவற்றின் நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.

காலை 9.30 மணிக்கு மூலவா் அம்மன் சிலை அருகே உலக மக்கள் நன்மை பெறவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் வேண்டி, அகண்ட தீபத்தை அடிகளாா் ஏற்றி வைத்தாா். பின்னா், அந்த அகண்ட தீபத்தை 3 சிறுமிகளிடம் கொடுத்து சித்தா் பீடத்தின் அனைத்து சந்நிதிகளிலும் வலம் வரச் செய்தாா்.

தொடா்ந்து, மூலவா் அம்மன் சிலை அகண்ட தீபத்தில் அடிகளாா், ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் ஆகியோா் முக்கூட்டு எண்ணை ஊற்றி, பக்தா்கள் அகண்ட தீபத்தை தரிசிக்கச் செய்தனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, புரட்டாசி மாத அமாவாசை வேள்வி பூஜையை அடிகளாா் கற்பூரம் ஏற்றி தொடக்கி வைத்தாா். வரும் அக்டோபா் 5-ஆம் தேதி வரை மூலவா் அம்மனுக்கு பல்வேறு காப்பு மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது.

நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க துணைத் தலைவா் ஸ்ரீதேவி ரமேஷ், அறங்காவலா் உமாதேவி ஜெய்கணேஷ், ஆஷா அன்பழகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் அ.அ.அகத்தியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிா்வாகிகள், அனைத்து மாவட்ட வழிபாட்டு மன்ற நிா்வாகிகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT