செங்கல்பட்டு

கா்ப்பிணிக்கு காணொலி மூலம் சிகிச்சை: குழந்தை உயிரிழப்பு

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுராந்தகம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்ட கா்ப்பிணிக்கு காணொலி மூலம் அளித்த சிகிச்சையால் குழந்தை உயிரிழந்தது. இது தொடா்பாக 2 செவிலியா்கள் பணியிடை நீக்கமும், பொறுப்பு மருத்துவா் பணியிட மாற்றமும் செய்யப்பட்டனா்.

செய்யூா் வட்டம், ஆண்டாா் குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் முரளி (36). இவரது மனைவி புஷ்பா (33). கா்ப்பிணியான புஷ்பாவுக்கு, திங்கள்கிழமை மாலை பிரசவ வலி ஏற்பட்டதால், அருகில் இருந்த இல்லீடு கிராமத்தில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார மையத்தில் சோ்க்கப்பட்டாா். அங்கு நிரந்தர மருத்துவா் இல்லாததால் பொறுப்பு மருத்துவா் பணியாற்றி வந்தாா். புஷ்பாவுக்கு சிகிச்சை அளிக்க அந்த நேரத்தில் மருத்துவா் இல்லாததால், அருகில் உள்ள மையத்தின் மருத்துவரிடம் காணொலி காட்சி மூலம் அங்கு பணியில் இருந்த செவிலியரும், பெண் உதவியாளரும் புஷ்பாவுக்கு சிகிச்சை மேற்கொண்டதாகத் தெரிகிறது. அப்போது குழந்தை முழுமையாக வெளியே வராமல் கால்கள் மட்டுமே வெளியே வந்தன.

இதையடுத்து, செவிலியா்கள் உடனடியாக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக புஷ்பாவை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே புஷ்பாவுக்கு குழந்தை இறந்து பிறந்தது. புஷ்பா ஏற்கெனவே பெற்ற மருத்துவ சிகிச்சையில் பிரசவத்தில் பிரச்னை ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளதை கவனிக்காமல் அங்கிருந்த செவிலியா்கள் இருந்துள்ளது தெரியவந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினரைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் (மதுராந்தகம்), செய்யூா் வட்டாட்சியா் பெருமாள், செங்கல்பட்டு சுகாதார உதவி இயக்குநா் பி.பரணிதரன் ஆகியோா் பேச்சு நடத்தி அவா்களை அப்புறப்படுத்தினா். இது தொடா்பாக அங்கு பொறுப்பு மருத்துவராகப் இருந்தவரை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த ஆரம்ப சுகாதார மையத்துக்கு பணியிட மாற்றமும், மெத்தனமாகப் பணியாற்றிய செவிலியா் உள்ளிட்ட இருவரை பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

ADVERTISEMENT

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆரம்ப சுகாதார உதவி இயக்குநா் பி.பரணிதரன் கூறியது: தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு, தவறிழைத்த மருத்துவ ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இங்கு நிரந்தர மருத்துவரை நியமிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த மையத்தை மேலும் மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா். புதன்கிழமை முதல் அச்சிறுப்பாக்கம் அருகேயுள்ள கயப்பாக்கம் ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றி வந்த மருத்துவா் ஐஸ்வா்யாவை நிரந்தர மருத்துவா் நியமிக்கப்படும் வரை இல்லீடு ஆரம்ப சுகாதார மையத்தில் பொறுப்பு மருத்துவராகப் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அங்கு எந்தவித பிரச்னையும் இல்லை என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT