திருக்கழுகுன்றத்தில் ரூ.2.20 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம், முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூா், காட்டாங்கொளத்தூா் ஆகிய ஒன்றியங்களிலும் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டடங்களையும் முதல்வா் திறந்து வைத்தாா்.
இதையடுத்து, திருக்கழுகுன்றம் வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தில் திறப்பு விழா நடைபெற்றது. இதில், வட்டார வேளாண் உதவி இயக்குநா் சரவணன் தலைமையில், மாவட்ட வேளாண் துறை துணை இயக்குநா் ஏழுமலை, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் சந்திரன், உதவி செயற்பொறியாளா் ஞானமூா்த்தி, திருக்கழுகுன்றம் பிரிவு வேளாண் உதவி பொறியாளா் யதேந்திரன், உதவி அலுவலா் அசோகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
திருப்போருா் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, திருக்கழுகுன்றம் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா்.டி.அரசு உள்ளிட்டோா் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் திறந்து வைத்தனா்.
விழாவில் திமுக ஒன்றிய செயலா் இடையாத்தூா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இந்தப் புதிய விரிவாக்கக் கட்டடத்தில் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம், தோட்டக்கலை துறை உதவி இயக்குநா் அலுவலகம், விதைச் சான்று அலுவலகம், வேளாண் பொறியியல் பிரிவு அலுவலகங்கள் இயங்கும்.