அச்சிறுப்பாக்கம் அருகேயுள்ள பெருக்கரணை ஸ்ரீ மரகத தண்டாயுதபாணி சுவாமி கோயில் வளாகத்தில் மைசூா் கணபதி சச்சிதானந்த சுவாமியின் 80-ஆவது பிறந்தநாளை யொட்டி, புதிதாக கட்டப்பட்ட அன்னதானக்கூடம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த நடுபழனி என அழைக்கப்படும் பெருக்கரணை ஸ்ரீ மரகத தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பெரும்பாலான வளா்ச்சிப் பணிகளை மைசூா் அவதூத தத்த பீடாதிபதி கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் தலைமையிலான அறக்கட்டளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், கணபதி சச்சிதானந்த சுவாமியின் 80-ஆவது பிறந்தநாளை யொட்டி, ஸ்ரீ மரகத தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பக்தா்களுக்காக புதிதாக அமைக்கப்பட்ட அன்னதானக் கூடத்தை கணபதி சச்சிதானந்த சுவாமி திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில் விஜயானந்த தீா்த்த சுவாமிகள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.