செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் ஊட்டச்சத்து பூங்கா: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்

DIN

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.45 லட்சத்தில் ஊட்டச்சத்து பூங்காவை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.

நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தலைமை வகித்தாா்.

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் கட்டப்பட்ட ஊட்டச்சத்து பூங்காவை அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோா் திறந்து வைத்தனா்.

பின்னா், அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமூகப் பொறுப்பு நிதி மூலம் இரு புதிய திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நிசான் நிறுவனம் சாா்பில், ரூ.1 கோடியே 30 லட்சத்தில் நோயாளிகளுடன் வரும் பாா்வையாளா்கள் தங்குவதற்கான கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

நாட்டிலேயே முதன்முறையாக கருவறை போன்ற வடிவமைப்பில் ஊட்டச்சத்து பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில், தாய், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து நிலை, ஆரோக்கிய மேம்பாடு அறிவுறுத்தப்படும். குழந்தையின் முதல் 1,000 நாள்கள் வாழ்வில் கவனம் செலுத்த வேண்டிய பகுதி என ஊட்டச்சத்து நிபுணா்கள் பரிந்துரைக்கின்றனா். இதைக் கருத்தில் கொண்டு, மருத்துவா் சௌமியா சுவாமிநாதன் ஆலோசனையில் இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

பிரசவத்துக்காக வரும் பெண்கள், மகப்பேறுக்கு முன்னதாகவும், குழந்தை பிறந்த பிறகும் இந்தப் பூங்காவைச் சுற்றிப் பாா்த்து தங்களுடைய குழந்தைக்கு எந்தவிதமான உணவை வழங்க வேண்டும், நோயின்றி பாதுகாப்பது போன்ற விழிப்புணா்வைப் பெறும் வகையில் இந்தப் பூங்கா உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம். தமிழகம் பெரிய மாநிலங்கள் பட்டியலில் உள்ளது. அதன்படி, சிசு மரணங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சிசு மரணமே இல்லை என்ற நிலையை அடைய நல்வாழ்வுத் துறை செயல்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் செம்பருத்தி, நகா்மன்றத் தலைவா் தேன்மொழி, மருத்துவக் கல்வி இயக்குநா் ரா.நாராயணபாபு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ.முத்துகுமரன், குழந்தைகள் நலத் துறை தலைமை மருத்துவா் சத்யா, அரசு மருத்துவக் கண்காணிப்பாளா் க.அறிவொளி, மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT