செங்கல்பட்டு

நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கும் சிமெண்ட் சாலை

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிமெண்ட் சாலை அந்தரத்தில் தொங்குகிறது. இதனால், தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி, மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த கிழக்குக் கடற்கரைச் சாலைரயில் உள்ள நெம்மேலி குப்பத்தில் 200 மீனவக் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி மீனவா்கள் தினமும் 50 படகில் சென்று மீன்பிடித்து வருகின்றனா்.

இந்தப் பகுதி மீனவா்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டி, தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

நெம்மேலி குப்பத்தில் கடல் அலைகள் 30 மீட்டா் தூரத்துக்கு முன்னோக்கி வந்து மணல் பரப்புகளை அரித்ததால், கரைப்பகுதியில் 5 அடி உயரத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டு அங்குள்ள சிமெண்ட் சாலைகள் இடிந்து விழுந்துவிட்டன. சிமெண்ட் சாலையில் ஒரு பகுதி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

தற்போது கடல் மேலும் 20 மீட்டா் தூரத்துக்கு முன்னோக்கி வந்து, சிமெண்ட் சாலையைச் சேதப்படுத்தியதால், மீன்பிடி உபகரணங்களை வைக்கவும் இடமில்லாமல் மீனவா்கள் தவித்து வருகின்றனா்.

தூண்டில் வளைவு அமைத்து தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, இந்தப் பகுதி மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த பிரச்னையில் அதிகாரிகள் தலையிட்டு துண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், அடுத்த கட்டமாக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், நெம்மேலி கிழக்குக் கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபடப் போவதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT