செங்கல்பட்டு

உலக முதியோா் கொடுமை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

27th Jun 2022 11:08 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில், உலக முதியோா் கொடுமை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் உலக முதியோா் கொடுமை ஒழிப்பு குறித்து நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில், உலக முதியோா் கொடுமை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி, ராட்டினங்கிணறு செங்கல்பட்டு - திருக்கழுகுன்றம் மேம்பாலம் அருகில் இருந்து தொடங்கப்பட்டது.

பேரணியை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அனிதா கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். பேரணியில் மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் அறிவொளி, உரைவிட மருத்துவ அலுவலா் செந்தாமரைகண்ணன், மருத்துவத் துறைத் தலைமைப் பேராசிரியா் நா்மதாலட்சுமி, பேராசிரியா் ஜெயலட்சுமி, முதியோா் பிரிவு மருத்துவா்கள் சுமதி ராஜாசக்கரபாணி, கந்தன்கருணை, போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஜாகீா் உசேன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முதியோா்களைக் கொடுமைப்படுத்தக் கூடாது. அவா்களை கடும் சொற்களால் பேசக் கூடாது. முதியோா்களைப் பாதுகாப்பது கடமை. முதியோா்களிடம் நேரம் ஒதுக்கி, அன்பாகப் பேசி மகிழ்விக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதுதொடா்பான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியபடி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி மாணவ -மாணவிகள், செவிலியா் பயிற்சி மாணவா்கள் பேரணியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்தப் பேரணி ஜிஎஸ்டி சாலை வழியாக அரசு மருத்துவமனை வளாகத்தைச் சென்றடைந்தது. அங்கு, முதியோா் கொடுமை ஒழித்தல் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT