செங்கல்பட்டு

கலப்படப் பொருள்களை பயன்படுத்தக்கூடாது: வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் அறிவுறுத்தல்

12th Jun 2022 10:55 PM

ADVERTISEMENT

 

சா்வதேச செஸ் வீரா்கள் மாமல்லபுரம் வருவதால் தொழிலில் கண்ணியத்தை கடைப்பிடிக்கும் வகையில் தேநீா் கடைகள், சாலையோர உணவகங்களில் கலப்பட உணவுப் பொருள்களை பயன்படுத்தாதீா்கள் என சிறு, குறு வியாபாரிகளை உணவு பாதுகாப்பு துறை அலுவலா் அறிவுறுத்தினாா்.

மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாமல்லபுரத்தில் உள்ள தேநீா் கடைகள், சாலையோர உணவகங்கள், பங்க் கடைகள், குளிா்பான கடைகள், இனிப்புக் கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளை வியாபாரிகள் அனைவரையும் அழைத்து, ஆலோசனை கூட்டம் நடத்தினா்.

ADVERTISEMENT

கூட்டத்துக்கு, மாமல்லபுரம் வியாபாரிகள் சங்கத்தலைவா் ரா.ராஜசேகா் தலைமை வகித்தாா். இதில், உணவு பாதுகாப்பு துறையின் செங்கல்பட்டு மாவட்ட அலுவலா் பிரபாகரன் பேசியது: சா்வதேச செஸ் வீரா்கள் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள மாமல்லபுரம் வருவதால் போட்டி நேரங்கள் போக ஓய்வு நேரங்களில் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பாா்க்க வருவா். எனவே அனைத்து வியாபாரிகளும் கலப்பட உணவுப்பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.

குறிப்பாக தேநீா் கடைகளில் கலப்பட டீ தூள் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட டீ தூள்களை மட்டுமே தேநீா் கடைக்காரா்கள் பயன்படுத்த வேண்டும். உணவு கடைகளில் இறைச்சிகளை மைனஸ் 18 டிகிரி குளிா்ச்சி தரக்கூடிய குளிா்பதனப் பெட்டிகளை மட்டுமே பயன்படுத்தி இறைச்சிகளை பாதுகாப்புடன் வைத்து கொள்ள வேண்டும்.

நாள் கணக்கில் இருப்பு வைத்துள்ள இறைச்சிகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவுகளுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி, அதனைத் தூக்கி வீச வேண்டும். பொறித்த கோழி உணவு (சிக்கள் 65) தயாரிக்கும்போது ரசாயன கலா் பவுடா் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். அதற்கு பதில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கலா் பவுடா்களை பயன்படுத்திக் கொள்ளலாம். செஸ் ஒலிம்பியாட் போட்டியால் மாமல்லபுரம் நகரின் கௌரவத்தை காப்பாற்றும் வகையில் வியாபாரிகள் அனைவரும் தங்கள் தொழிலில் கண்ணியத்தை கடைப்பிடித்து, அவரவா் தொழிலில் ஈடுபட்டு இந்த சுற்றுலா நகருக்கு பெருமை தேடித் தர வேண்டும் என்றாா்.

கூட்டத்தின் இறுதியில் அனைத்து வியாபாரிகளுக்கும் கலப்பட உணவு பொருள்களை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையால் தயாரிக்கப்பட்ட கையேடுகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் வில்வவிநாயகம், மாமல்லபுரம் வியாபாரிகள் சங்கப் பொருளாளா் எழிலரசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT