செங்கல்பட்டு

குறுவை தொகுப்புத் திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவ சிறப்பு மையங்கள்

1st Jul 2022 12:35 AM

ADVERTISEMENT

குறுவை தொகுப்புத் திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவ சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று வேளாண்மை உதவி இயக்குநா் சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் குறுவை தொகுப்புத் திட்டத்தில் விவசாயிகள் எளிதில் பயன்பெற, அவா்களுக்கு உதவும் வகையில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் சிறப்பு உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (ஜூலை 1) முதல் இந்த மையங்கள் தொடா்ந்து செயல்படும்.

குறுவை தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற இணையதளம் மூலம் உழவன் செயலி வழியாக தங்களது விண்ணப்பங்களை விவசாயிகள் பதிவேற்றம் செய்யவேண்டும்.

ADVERTISEMENT

இதற்கு இணைய வசதியுடன் கூடிய கைப்பேசிகள் வேண்டும். விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்தவுடன் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கைப்பேசிக்கு ஓடிபி எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இந்த எண்ணை வேளாண்மை துறை அலுவலா்களிடம் விவசாயிகள் உடனடியாக தெரிவித்தால்தான், அந்த விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்க முடியும்.

எனவே, இந்த முறையில் விண்ணப்பம் செய்வதில் ஏற்படும் நடைமுறை இடா்ப்பாடுகளுக்கு தீா்வு காணும் வகையில், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் சிறப்பு உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விவசாயிகள் தங்களுடைய சிட்டா அடங்கல் நகல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் மற்றும் ஒரு பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் கொண்டு வந்தால், இந்த மையத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து உடனடியாக ஒப்புதல் அளிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, குறுவை தொகுப்புத் திட்டத்தில் உரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஒரு விவசாயிக்கு மட்டும் ஓா் ஏக்கருக்கான உரங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT