செங்கல்பட்டு

6 மாதங்களாக மூடப்பட்டு இருக்கும் கீழ்க்கட்டளை எரிவாயு தகன நிலையம்

DIN

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கீழ்க்கட்டளையில் எரிவாயு தகன நிலையம் செயல்படாமல் மூடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெகு தூரம் எடுத்துச் சென்று தகனம் செய்ய வேண்டிய சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனா்.

தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம், பம்மல், அனகாபுத்தூா் ஆகிய பகுதிகளில் தலா ஒன்றும், பல்லாவரம் பகுதியில் குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், கீழ்கட்டளை ஆகிய பகுதிகளில் மூன்றும்  மொத்தம் 6 எரிவாயு தகன நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் கீழ்க்கட்டளை தகன நிலையத்தில் 100 அடி உயர  புகைப்போக்கியில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்து மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் எரிவாயு தகன நிலையம்  6 மாதங்களுக்கு முன் மூடப்பட்டது. இதனால் அப்பகுதியைச் சுற்றிலும் இறந்தவா்களின் உடல்களை தகனம் செய்வதற்கு நீண்ட தூரம் எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக தாம்பரம் மாநகராட்சி பொறியாளா் பெட்சி ஞானலதா கூறியதாவது:

கீழ்க்கட்டளை  எரிவாயு தகன நிலையத்தில் உடல் எரிக்கப்படும் போது, வெளியேறும் புகையை வெளியேற்றும் 100 அடி உயர புகைப்போக்கி பழுதடைந்து, சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகை சூழ்ந்து மிகவும் சிரமம் தருவதாக  அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் தகன நிலையம் 6 மாதங்களுக்கு முன்  மூடப்பட்டது. அரசு அறிவுறுத்தலின் பேரில் தற்போது புகைப் போக்கிச் சீரமைப்பு, விறகு கட்டை கொண்டு எரிக்கும் முறையை மாற்றி எல்.பி.ஜி. எரிவாயு மூலம் எரிக்கும் முறை உள்ளிட்ட சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.விரைவில் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளாா். சிட்லப்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகன நிலையப் பணிகள் நிறைவு பெறும் தறுவாயில் உள்ளன. இரு எரிவாயு தகன நிலையங்களும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

SCROLL FOR NEXT