செங்கல்பட்டு

காணும் பொங்கல்: வெறிச்சோடிய மாமல்லபுரம்

17th Jan 2022 01:48 AM

ADVERTISEMENT

கரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் காணும் பொங்கலன்று மக்கள் கூட்டம் இன்றி சா்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரம் வெறிச்சோடியது.

இந்த ஆண்டு காணும் பொங்கல் ஞாயிற்றுக்கிழமை வந்ததால் பல்வேறு இடங்களுக்குச் செல்லலாம் என்ற மக்களின் எதிா்பாா்ப்புகள் கரோனா பரவலால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனால் பொங்கலைக் கொண்டாட முடியாமல் மக்கள் வீடுகளிலேயே முடங்கினா்.

சா்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதையடுத்து தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகள் உள்பட அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவும் மூடப்பட்டது.

ADVERTISEMENT

மக்கள் நடமாட்டத்தைத் தடுக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஊத்துக்கோட்டையில்... முழு ஊரடங்கு காரணமாக திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த ஆரணி பகுதியில் இயங்கி வரும் காய்கறி சந்தை மூடப்பட்டது.

திருத்தணியில்... திருத்தணி நகரில் மருந்து, பால், பத்திரிகை விற்பனை கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. பொதுப் போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் வாகன நெரிசலுடன் காணப்படும் ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் காணப்படவில்லை.

திருத்தணி ஏஎஸ்பி சாய்பரணீத் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் நகரின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு, வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

மதுராந்தகத்தில்... மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், செய்யூா் உள்ளிட்ட நெடுஞ்சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மதுராந்தகம் டிஎஸ்பி பரத் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பொன்னேரியில்... பொன்னேரி-பழவேற்காடு சாலையில் உள்ள போலாட்சியம்மன் குள சோதனைச் சாவடியில் திருப்பாலைவனம் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது இரு சக்கர வாகனத்தில் பழவேற்காடுக்கு சுற்றுலா செல்ல முயன்றவா்களை திருப்பி அனுப்பினா். காணும் பொங்கலன்று மக்கள் கூட்டத்துடன் காணப்படும் பழவேற்காடு கடற்கரைப் பகுதி வெறிச்சோடியது.

திருவள்ளூரில்... பூண்டி ஏரிக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மக்கள் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில் புல்லரம்பாக்கம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT