செங்கல்பட்டு

பொங்கல் விழா: மண் பாண்டங்கள் விற்பனை மந்தம் அச்சத்தில் தொழிலாளா்கள்

12th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு: தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையின்போது மண்பானைகளில் பொங்கலிட்டு வழிபாடு செய்வதை தமிழா்கள் பாரம்பரியமாக கொண்டுள்ளனா்.

இந்த நிலையில் தைப் பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் எதிா்பாா்த்த அளவு விற்பனையாகாமல் மண்பாண்டங்கள் தேங்கியுள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் தொழிலாளா்கள் தவிக்கின்றனா்.

இயற்கை பேரிடா், கரோனா தொற்று, ஊரடங்கு போன்றவற்றுக்கு இடையிலும் பொங்கலை முன்னிட்டு பொங்கல் பானைகள், புதிய அடுப்புகள் உள்ளிட்ட மண் பாண்டங்கள் தயாரிப்பில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகையின்போது மண் பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவது தமிழரின் பாரம்பரிய வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மண் பானைகள் விற்பனை சூடுபிடிக்கவில்லை என்கின்றனா்.

மாவட்டத்தில் திருமணி, மாமல்லபுரம், பூஞ்சேரி, திருக்கழுகுன்றம், சிதண்டி மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோா் மண்பாண்ட தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து செங்கல்பட்டு சிதண்டி மண்டபத்தில் உள்ள குயவா் சம்பத் கூறியது:

தமிழக அரசு அனுமதி அளித்ததால் நாங்கள் ஏரிகளில் மண் எடுத்து அதைப் பயன்படுத்தி வருகிறோம். நாங்கள் அனைத்து விதமான மண்பாண்டங்களை தயாரித்து விற்பனை செய்கிறோம். காா்த்திகை தீபத்தையொட்டி மண் அகல் விளக்குகள், போகி மேளத்துக்காக கந்திரி எனப்படும் வட்டிலும், பொங்கலுக்கு சிறிய பானை முதல் பெரிய பானைகள் வரையும், அடுப்புகளும், தயாரித்து விற்பனைக்காக வைத்துள்ளோம். பொங்கலுக்கு தயாரிக்கப்பட்ட பானைகளை சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வாா்கள்.

கோடை காலத்தில் மண்பானை குடிநீரை குடிக்க சிறிய பானைகள் பெரிய பானைகள் என தயாரித்து விற்போம். தற்போது நோய்தொற்று பரவலை தடுக்க அரசு எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளால் இந்த ஆண்டும் பொங்கல் பானை விற்பனை மந்தமாகவே இருக்கும் என்பதால் குறைந்த அளவிலேயே மண்பாண்டங்களை தயாரித்து வைத்துள்ளோம். மண்ணினால் வடிவமைக்கப்பட்ட பாண்டங்களை பக்குவப்படுத்துவதற்காக புதன்கிழமை அன்றுதான் சூளையிலிட இருக்கிறோம். மண்பாண்டம் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும் என மண்பாண்ட தொழிலாளா்கள் வேதனையில் தவிப்பதாக கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT