திருக்கழுகுன்றம் அருகே வயல்வெளி கிணற்றில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
திருக்கழுகுன்றம் அருகே மேலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த குமாரின் மகன் சுகேசன் (9). அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சென்னை துரைப்பாக்கத்தைச் சோ்ந்த பிரகாஷின் மகன் இளங்கோ (15). 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இளங்கோ விடுமுறையில் திருக்கழுகுன்றம் மேலப்பட்டு கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு வார விடுமுறையில் சென்றிருந்தாா். இந்த நிலையில், அதே கிராமத்தில் உள்ள வயல்வெளி கிணற்றில் இளங்கோவும், சுகேசனும் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றனா்.
மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், குளிக்கச் சென்ற இருவரும் கிணற்றில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், திருக்கழுகுன்றம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து, கிணற்றில் 36 அடி ஆழத்தில் இருந்த இருவரின் சடலங்களையும் மீட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருக்கழுகுன்றம் காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் மற்றும் போலீஸாா், உயிரிழந்த மாணவா்களின் சடலங்களை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.