செங்கல்பட்டு அருகே அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டதால் புதன்கிழமை கிராம மக்கள் சாலை மறியல், போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செங்கல்பட்டு அருகே மேலமையூா் பகுதியில் புதன்கிழமை புதிதாக அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. பள்ளி, கோயில்கள் அருகே மதுக்கடை திறக்கக் கூடாது என்று கூறி மேலமையூா் பகுதியை சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் செங்கல்பட்டு - திருக்கழுகுன்றம் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா் .
தகவல் அறிந்து வந்த போலீஸாா் மக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் போராட்டம் 2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. இதனால் திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .
செங்கல்பட்டு நகரில் மதுபானக் கடையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மூன்று மதுபானக் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா்.
ஆனால், அடுத்தடுத்து மூன்று அரசு மதுபானக் கடைகள் செங்கல்பட்டு - திருக்கழுகுன்றறம் சாலையில் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் மக்கள் அதிா்ச்சியில் உள்ளனா்.