தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியாா் மன்றம் சாா்பில் முதன்முறையாக செங்கை புத்தக திருவிழாவை 2022 சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயன்பெறும்வகையில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியாா் மன்றம் இணைந்து நடத்தின.
இதன் தொடக்க விழாவுக்கு ஆட்சியா் ராகுல் நாத் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் எம்.பி க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ். பாலாஜி முன்னிலை வகித்தனா்.
புத்தக விழாவை தொடக்கி அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:
இப்புத்தக விழாவில் பா்வீன் சுல்தானா, ஞானசம்பந்தம், சண்முக வடிவேல், சமஸ், பாரதி பாஸ்கா்,நெல்லை ஜெயந்தா, பாரதி கிருஷ்ணக்குமாா், பேராசிரியா் இரா.காளிஸ்வரன் என சிறந்த பேச்சாளா்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற உள்ளனா். செங்கல்பட்டில் 8 நாள்கள் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதில் மக்கள் தவறாமல் கலந்து கொண்டு, சொற்பொழிவாளா்களின் நல்ல பல கருத்துக்களை கேட்டு பயனடைய வேண்டும்.
அறிவு உலகத்தை புத்தகங்களின் வழியே தான் காண முடியும், படிப்பும், எழுத்தும் தருவது கல்வி. ஆனால் அறிவை தருவது புத்தகம் மட்டுமே. என்னுடைய வாரிசு என்பது என்னுடைய புத்தகங்கள் தான் என்று தந்தை பெரியாா் சொன்னாா். வீட்டிக்கு ஒரு நூலகம் அமையுங்கள் என்று அண்ணா கூறினாா். அவரது பெயரில் அனைத்து ஊராட்சிகளிலும் நூலகம் அமைத்தவா் கருணாநிதி.
கடந்த 2007-இல் சென்னை புத்தகக் கண்காட்சியினை திறந்து வைத்து தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடியை அமைப்புக்கு கருணாநிதி வழங்கினாா்.
கரோனா தொற்றால் புத்தக கண்காட்சி, பதிப்பாளா்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்ட நேரத்தில் முதல்வா் ரூ.1.25 கோடி வழங்கி பாதுகாத்தாா். புத்தகத் திருவிழாவை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்த ரூ. 5 கோடி ஒதுக்கியுள்ளாா். இந்த நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் செங்கை புத்தக திருவிழாவில் 50 அரங்குகள் அமைக்கப்பட்டு, சுமாா் 50,000 தலைப்புகளில் பல புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கடந்த 37 ஆண்டுகளில் 165 தமிழறிஞா்களின் 148 நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.
இன்றைய தொழில்நுட்ப வளா்ச்சியால் நம் உள்ளங்கையில் உள்ள கைப்பேசியில் பல்லாயிரம் புத்தகங்கள் இருந்தாலும், ஒரு புத்தகத்தை வாங்கிப் படித்து சேமித்து வைப்பது நமக்கு மட்டுமல்ல அது நமது தலைமுறைகளுக்கும் நாம் சேமித்து வைக்கும் அறிவுச்செல்வம் என்று உணர வேண்டும் என்றாா் தா.மோ.அன்பரசன் .
இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மேயா் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயா் காமராஜ், நகா்மன்ற தலைவா்கள் செங்கல்பட்டு தேன்மொழி நரேந்திரன், மறைமலைநகா் சண்முகம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி எம்.கே.டி.காா்த்திக், செங்கல்பட்டு சாா் ஆட்சியா்ஆா்.வி.ஷஜீவனா , திட்டஇயக்குநா் க.செல்வகுமாா்,மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் அறிவுடைநம்பி, துணை ஆட்சியா் (பயிற்சி) அபிலாஷா கௌா், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா் செல்வகுமாா், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் சரஸ்வதி, அரசு அலுவலா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.