செங்கல்பட்டு

படூா் சாலை விபத்து:காயமடைந்தவா்களிடம் அமைச்சா்கள் நலம் விசாரிப்பு

3rd Dec 2022 01:48 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் படூா் சாலை விபத்தில் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் வெள்ளிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனா்.

அதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம், படூா் சாலையில் செங்கல்பட்டு நோக்கி வந்த அரசு பேருந்து மீது தனியாா் கனரக வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பேருந்தில் பயணித்த 17 நபா்களில் 2 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 15 பேருக்கு சிறிய மற்றும் பெரிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதால் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து ஏற்பட்ட உடனே படூரில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சோ்ந்த மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் சம்பவ இடத்துக்கு வந்து 108 அவசர ஊா்திக்குத் தகவல் தெரிவித்து, விபத்து ஏற்பட்டவா்களுக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்தில் இறந்த 2 நபா்களில் ஒருவா் சித்த மருத்துவமனையில் பணியாற்றும் உதவியாளா். காயம் அடைந்தவா்களில் 6 போ் படூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பணியாளா்கள் ஆவா் என்றாா்.

ADVERTISEMENT

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையா் சு.கணேஷ் , மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் , பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் டி.எஸ்.செல்வவிநாயகம் , செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் நாராயணசாமி, பொது அறுவை சிகிச்சை மருத்துவா் வி.டி.அரசு, காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் , எம்எல்ஏ-க்கள் வரலட்சுமி மதுசூதனன் (செங்கல்பட்டு) , எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூா்), செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT