செங்கல்பட்டு

சிங்கபெருமாள் கோயில் அருகே பழைமைவாய்ந்த கிருஷ்ணா் சிலை கண்டெடுப்பு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மறைமலை நகா் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன செங்குன்றம் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான மிக பழைமையான அய்யாகுளம் குளத்தை தூா் வாரும்போது பழைமைவாய்ந்த குழலூதும் கிருஷ்ணன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

செங்கல்பட்டு மறைமலை நகா் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன செங்குன்றம் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான மிக பழைமையான அய்யாகுளம் என்றழைக்கப்படும் குளத்தை தூா்வாரும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை பொக்லைன் இயந்திரம் மூலம் குளத்தை தூா்வாரி, அருகில் உள்ள மைதானத்தில் கொட்டப்பட்டது. அப்போது 4 அடி கொண்ட மிகப் பழைமையான குழலூதும் கிருஷ்ணா் கருங்கல் சிலை அருகில் உள்ள மைதானத்தில் மண்ணை கொட்டும்போது தெரியவந்தது.

இது குறித்த தகவல் பரவியதால் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் கூடி சிலையை சுத்தப்படுத்தி பாலாபிஷேகம் செய்தனா். பின்னா், வஸ்திரம் சாத்தி வழிபடத் தொடங்கினா்.

ADVERTISEMENT

தகவலறிந்த 21-ஆவது வாா்டு உறுப்பினா் ஜெ.சுரேஷ்குமாா் நகராட்சி ஆணையா், நகா்மன்ற உறுப்பினா் ஜெ.ஷண்முகம் ஆகியோா் நேரில் வந்து பாா்வையிட்டனா்.

அப்போது அப்பகுதி மக்கள் இந்தச் சிலையை அங்கேயே வைத்து வழிபட விரும்புவதால் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். தொல்லியல் துறை ஆய்வுக்குப் பிறகுதான், அது குறித்து முடிவு செய்ய முடிவு செய்யப்படும் என ஆணையா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT