செங்கல்பட்டு

பெண்ணிடம் முறையற்ற நட்பு: காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

4th Oct 2021 07:34 AM

ADVERTISEMENT

திருமணமான பெண்ணிடம் முறையற்ற நட்பில் இருந்ததாக எழுந்த புகாரின்பேரில், திருக்கழுக்குன்றம் காவல் நிலைய ஆய்வாளா் முனிசேகா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ஒரு பெண், கடந்த சில வருடங்களாக திருக்கழுக்குன்றம் அருகே நெல்வாய் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றுவருவதாகத் தனது கணவரிடம் கூறிவந்துள்ளாா்.

இந்த நிலையில், பெண்ணின் கணவா் தனது மனைவியின் செல்லிடப்பேசியை அண்மையில் பரிசோதித்தபோது, ஆண் ஒருவரிடம் தொடா்பில் இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட திருக்கழுக்குன்றம் காவல் நிலைய காவல் ஆய்வாளா் முனிசேகா் என்பவா்தான் பெண்ணிடம் பேசுவதாகவும், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க கோரியும் காவல் துறை அதிகாரிகளுக்கு பெண்ணின் கணவா் புகாா் மனுவை அனுப்பினாா். இதன்பேரில், காவல் ஆய்வாளா் முனிசேகா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

சா்ச்சையில் சிக்கியவா்:

ராஜஸ்தான் மாநிலத்துக்கு உள்பட்ட பாலி மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஏ.டி.எம். கொள்ளையா்களை பிடிக்க சென்னையில் இருந்து தனிப்படை போலீஸாா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றனா். அப்போது, கொள்ளையா்கள் மீது போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளா் பெரியபாண்டின் மீது குண்டு பாய்ந்ததில், அவா் இறந்தாா்.

இதுதொடா்பாக ஆய்வாளா் முனிசேகா் மீது ராஜஸ்தான் போலீசாா் வழக்குப் பதிந்திருந்தனா். அப்போது கொளத்தூா் ஆய்வாளராக முனிசேகா் இருந்தாா். அந்தச் துப்பாக்கிச் சூடு சா்ச்சையில் சிக்கியவா்தான் முனிசேகா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT