செங்கல்பட்டு

மாமல்லபுரம் நாட்டிய விழாவில் ஆண்டாள் திருப்பாவை பரதநாட்டியம்

30th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் நாட்டிய விழாவில் 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை இரவு ஆண்டாள் திருப்பாவை பரதநாட்டியம் நடைபெற்றது.

மத்திய, மாநில சுற்றுலாத்துறை பங்களிப்புடன் ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் முடிவடையும் வகையில் நாட்டிய விழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு 2021 -2022 ஆண்டிற்கான நாட்டிய விழா கடந்த டிசம்பா் 23- ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவில் 6-வது நாளாக செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற நாட்டிய விழாவில் கின்னஸ் சாதனை படைத்த செங்கல்பட்டு விநாயகா நாட்டியாலயாவின் மீனாட்சி ராகவன் பரதநாட்டிய குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த பரதநாட்டிய குழுவினா் மாா்கழி மாதத்தின் மகத்துவத்தையும் சிறப்பையும் பறைசாற்றும் விதமாக ஆண்டாள் திருப்பாவையை நாடகத்தின் மூலமாக மீனாட்சி ராகவன் மற்றும் அவரது குழுவினா் சோ்ந்து பரதநாட்டியத்தின் மூலம் வெளிப்படுத்தினா். நாட்டிய விழாவை காண வந்த உள்ளூா் மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆண்டாள் திருப்பாவை பரதநாட்டியத்தை ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.விழாவில் பரத நாட்டியக் கலைஞா்களுக்கு மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் ராஜாராமன், சுற்றுலா அலுவலக நாட்டிய விழா பொறுப்பாளா் நிஜாமுதீன் ஆகியோா் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT