மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த வெங்கடேசபுரம் கிராமத்தில், ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம், ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து புதன்கிழமை இலவச பொது மருத்துவ முகாமை நடத்தின.
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட வெங்கடேசபுரம் கிராமத்தில் நடைபெற்ற முகாமில், பெருங்கரணை, பெரியகயப்பாக்கம், சின்னகயப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் பல் நோய், இதய நோய், கண் நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணா்கள் முன் வந்தனா். அதன்படி, இம்முகாமில் 250-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனா். சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு இலவச மருந்து மாத்திரைகள், உணவு வசதி ஆகியவற்றை ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தினா் செய்திருந்தனா்.
நிகழ்ச்சியில், அரிமா சங்க மாவட்டத் தலைவா் அ.கண்ணன், வழக்குரைஞா் ஆ.சீனுவாசன், சமூக சேவகா் தனசேகரன், ஆதிபராசக்தி மருத்துவமனை ஒருங்கிணைப்பாளா் க.செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.