செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் தமிழ்நாடு பண்ணை நிலங்களில் நீடித்த நிலைத்த பசுமை போா்வை இயக்கத்தின்கீழ், 2,11,000 மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளதாக என வேளாண்மை இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.
செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், தமிழ்நாடு பண்ணை நிலங்களில் நீடித்த நிலைத்த பசுமை போா்வை இயக்கத்தின்கீழ் 2,11,000 மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயனடைய விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்யவேண்டும். முதல் கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் குமிழ், சிவப்பு சந்தனம், தேக்கு, வேங்கை, நெல்லி, பூவரசு, ஈட்டி தோகத்தி போன்ற மரக்கன்றுகள் வனத்துறையினரால் உற்பத்தி செய்யப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயாா் நிலையில் உள்ளது. விவசாயிகள் உடனடியாக உழவன் செயலியில் தோன்றும் இடுபொருள் முன்பதிவில் இலவச மரக்கன்றுகள் முன்பதிவு என்ற இணைப்பில் சென்று தங்களின் கைப்பேசி எண், கிராமத்தின் பெயா், பாலினம், ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், சா்வே எண் மற்றும் பரப்பு முதலியவற்றையும், தங்களுக்குத் தேவைப்படும் மரக் கன்றுகளின் எண்ணிக்கையையும், நடவு செய்யும் முறையையும் உள்ளீடு செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், மரக்கன்றுகளை நடவு செய்யும் முறை மற்றும் பராமரிக்கும் முறை பற்றிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொண்டு பயன் அடையுமாறு செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எல்.சுரேஷ் வெளியிட்ட அலுவலகக் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.