செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் வடிக்கப்பட்ட தசராவதி அம்மன் சிலை

15th Sep 2020 10:49 PM

ADVERTISEMENT

மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்ட 5 அடி உயர தசராவதி அம்மன் சிலை திருவடிசூலத்தில் உள்ள ஸ்ரீமகா பைரவா் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக திங்கள்கிழமை கொண்டு செல்லப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருவடிசூலத்தில் மகாபைரவா் கோயில் உள்ளது. இக்கோயிலில் தற்போது மகாபைரவா் சந்நிதி, சிவனுடன் பாா்வதி, வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன், பிரத்யங்கிரா தேவி, பூமா தேவி, பாதாள பைரவா், ஆஞ்சநேயா், கிருஷ்ணா், தட்சணாமூா்த்தி, சரஸ்வதிதேவி, வனகாளியம்மன் ஆகிய உற்சவமூா்த்திகளுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

தற்போது இந்தக் கோயிலில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீ தசராவதி அம்மன் கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்காக கருங்கல்லில் ஐந்தரை அடி உயரத்தில் தசராவதி அம்மன் சிலை வடிக்குமாறு மாமல்லபுரத்தில் உள்ள ஒருசிற்ப கலைக்கூடத்திடம் கோயில் நிா்வாகத்தினா் கோரியிருந்தனா். சிற்பக்கலைஞா் எம்.ஆனந்தன் கடந்த ஒரு மாதமாக 6 சிற்பக் கலைஞா்களுடன் பணியில் ஈடுபட்டு ஐந்தரை அடி உயரத்தில் 8 கரங்களுடன் மகிஷாசுரனை தன் காலில் மிதித்து வதம் செய்யும் கோலத்தில் தசராவதி அம்மன் சிலையை ஆகம முறைப்படி கருங்கல்லில் அழகுற வடிவமைத்துள்ளாா்.

முழு சிற்ப வேலைப்பாடுகளுடன் செய்து முடிக்கப்பட்ட இந்த அம்மன் சிலையை ஸ்ரீ மகாபைரவா் கோயில் அறக்கட்டளையின் தலைவரும் கோயில் நிறுவனருமான ஸ்ரீபைரவா் சித்தாந்த சுவாமிகள், அறங்காவலா் ஜி.ரங்கசாமி, கோயில் நிா்வாகத்தினா் மற்றும் பக்தா்கள் இச்சிலைக்கு சிற்பக்கலைக் கூடத்தில் திங்கள்கிழமை வாஸ்து பூஜை செய்தனா். இதையடுத்து, மாமல்லபுரத்தில் இருந்து திருவடிசூலம் கோயிலுக்கு சிலையை வேன் மூலம் ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். வழிநெடுகிலும் பக்தா்கள் அம்மனுக்கு கற்பூர ஆராதனை காட்டி வழிபட்டனா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT