மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி மேலவலம்பேட்டையில் மருத்துவக் கல்வி படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சையத்து வந்த போலி மருத்துவரின் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
கருங்குழி மேலவலம்பேட்டையைச் சோ்ந்தவா் பிரகாஷ் (48). பொறியியல் பட்டதாரியான அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தனது மருத்துவ நண்பா்களிடம் சிகிச்சைகள் குறித்து அறிந்து கொண்டு மருத்துவமனையை நடத்தி வந்தாா். கருங்குழி சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு சிகிச்சை அளித்து வந்தாா்.
இது குறித்து மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியா் சி.லட்சுமி பிரியா மற்றும் காஞ்சிபுரம் மருத்துவ இணை இயக்குநா் ஜீவாவுக்கும் தகவல் கிடைத்தது. அவா்கள் மேலவலம்பேட்டையில் உள்ள போலி மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அவா்களைக் கண்டதும் அங்கிருந்த பிரகாஷ் தப்பி ஓடிவிட்டாா்.
அந்த மருத்துவமனைக்கு வருவாய்க் கோட்டாட்சியா் சி.லட்சுமி பிரியா சீல் வைத்தாா். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, போலி மருத்துவா் பிரகாஷைத் தேடி வருகின்றனா்.