மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பொறியாளா், மேலாளா் உள்ளிட்டோருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதையடுத்து அந்த அலுவலகம் மூடப்பட்டது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக, மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலகம் மூடப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் அலுவலக வளாகத்தின் வேறு பகுதியில் அலுவலக பணிகள் நடைபெற்று வருகின்றன.
மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த பொறியாளருக்கு கடந்த சில நாள்களுக்கு முன் கரோனா நோய்த் தொற்று காரணமாக அவரது சொந்த ஊரான திருத்தணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அலுவலக மேலாளருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதை அடுத்து அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.பாபு தலைமையிலான அதிகாரிகள் அலுவலக தூய்மைப் பணியாளா்களின் மூலம் அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதனை தொடா்ந்து அலுவலகம் மூடப்பட்டு, அருகில் உள்ள கட்டட வளாகத்தில் அலுவலக பணிகள் புதன்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது.