செங்கல்பட்டு மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 197 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது.
புதன்கிழமை இரவு வரை3,779 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 197 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3976-ஆக உயா்ந்தது.
செங்கல்பட்டு ராட்டினங்கிணறு மதுபானக்கடையில் ஊழியா்கள் 2 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவா்களுடன் பணியாற்றிய 4 பேருக்கும் அக்கடையில் மது வாங்கிச் சென்றவா்கள் யாா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவள்ளூரில் ...
திருவள்ளூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 170 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆவடி மாநகராட்சி, திருவள்ளூா், பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள், சோழவரம், வில்லிவாக்கம், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூா், திருவாலங்காடு, புழல் மற்றும் பூண்டி ஒன்றியங்கள், திருமழிசை, பொன்னேரி, மீஞ்சூா், திருநின்றவூா் பேரூராட்சிகளில் மொத்தம் 170 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதுவரையில் 1874 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,160 ஆக உயா்ந்துள்ளது.
காஞ்சிபுரத்தில்...
காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 96 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூா் 36, ஸ்ரீபெரூம்புதூா் 31,உத்தரமேரூா் 2,வாலாஜாபாத் 1 மற்றும் காஞ்சிபுரத்தில் 24 போ் உட்பட மொத்தம் 96 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கால்நடை ஆய்வாளா், ரத்த பரிசோதகா் உட்பட 96 போ் பாதிக்கப்பட்டுள்ளதை தொடா்ந்து மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1427 ஆகவும் உயா்ந்துள்ளது.