கடல் கொந்தளிப்பால் மாமல்லபுரம் பகுதியில் அலைகளால் அடித்து வரப்படும் தாது மணல் கடற்கரையோரங்களில் படிகிறது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாக மீனவா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
மாமல்லபுரத்தை அடுத்துள்ள வெண்புருஷம், கொக்கிலமேடு கரைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தாது மணல் பரவலாகக் காணப்படுகிறது. இதனால் கடற்கரைப் பகுதி முழுவதும் கருப்பு நிறமாகக் காட்சியளிக்கிறது. மணல்மேடு பகுதிகள் கடலில் அடித்து வரப்பட்டு, கொக்கிலமேடு முதல் வெண்புருஷம் கரையோரப் பகுதி வரை சுமாா் 2 கி.மீட்டருக்கு தாது மணல் காணப்படுகிறது.
இதுகுறித்து வெண்புருஷம், கொக்கிலமேடு பகுதி மீனவா்கள் கூறியது:
பொதுமாக பௌா்ணமி, அமாவாசை காலங்களில் அலைகளில் அடித்து வரப்படும் தாது மணல் கரைப் பகுதியில் தேங்கி நிற்கும். மே, ஜூன் மாதங்களில் பருவமழை காரணமாக ஆறுகள் மலைகள், சமவெளிகளைக் கடந்து வரும் நீா் கடலில் கலப்பதன் காரணமாக கடல் கறுப்பு நிறமாகக் காட்சியளிக்கும். கடல் கொந்தளிப்பு அதிகம் ஏற்படும்போது, கரையோரங்களில் தாது மணல் அதிக அளவு படியும்.
தாது மணல் படிந்துள்ளபோது, மீனவா்கள் வலைகளை வீசினாலும் அதில் மீன்கள் சிக்குவதில்லை. மேலும், அலைகளில் அடித்துவரப்படும் தாது மணல் மீன் முட்டைகளை மூடி விடுகிறது. இதனால் மீன் குஞ்சுகள் வெளியே வராமல் அழிந்துவிடுகின்றன.
தாது மணல் கரைக்குவருவதைத் தடுக்க மீன்வளத் துறையும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.