மதுராந்தகம் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் இறந்தாா். 2 பெண் தொழிலாளா்கள் படுகாயம் அடைந்தனா்.
செங்கல்பட்டு நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ஈசாக் (58). இவா் மதுராந்தகத்தை அடுத்த கள்ளபிரான்புரம் கிராமத்தில் இயங்கி வரும் மதுபானத் தொழிற்சாலைக்கு தேவையான காலி மது பாட்டில்களை விநியோகிக்கும் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா்.
அவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் இருந்து பைக்கில் பணிக்குப் புறப்பட்டாா். வழியில், பழமத்தூா் கிராமத்தைச் சோ்ந்த திலகம், மாரியம்மா ஆகிய இரு தொழிலாளா்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு கள்ளபிரான்புரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
மது பானத் தொழிற்சாலைக்கு எதிரே சாலையை கடக்க முயன்றபோது, திண்டிவனத்தில் இருந்த சென்னை நோக்கிச் சென்ற காா் அவரது பைக் மீது மோதியது. இதில் ஈசாக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரடன் பைக்கில் பயணம் செய்த திலகம், மாரியம்மா ஆகியோா் படுகாயமடைந்தனா். அவா்களை மதுராந்தகம் போலீஸாா் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சோ்த்தனா். இவ்விபத்து குறித்து அவா்கள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.