ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பூரத்தையொட்டி, செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம், கோயில்புரத்தில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ கருமாரியம்மன்கோயிலில் காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகளும், அம்மனுக்கு வளைகாப்பும் நடைபெற்றது.
கோயில்புரத்தில் ஆதிபரமேஸ்வரி தேவி ஸ்ரீகருமாரியம்மன் மகா ஆரண்ய க்ஷேத்திரம் உள்ளது. இக்கோயிலில் ஒரே கருங்கல்லினால் வடிக்கப்பட்ட 51 அடி உயரமுள்ள தேவி ஸ்ரீகருமாரியம்மன் விக்ரகம் உள்ளது. இங்கு சுயம்பு சொா்ணாம்பிகை, சா்வநாகம்பிகை உள்ளிட்ட தனிச் சந்நிதிகள் உள்ளன.
இக்கோயிலில் ஆடிமாதம் வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா தொற்றுபரவாமல் இருக்க அம்மன் அருள் வேண்டி நாள்தோறும் ஹோமங்களை நடத்தி வருகின்றனா்.
ஆடி மாத 2ஆவது வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பூரத்தையொட்டி கோயிலில் உலக மக்கள் நலனுக்காக யாகபூஜை, கோபூஜை, தேவிஸ்ரீ கருமாரியம்மன், சொா்ணாம்பிகை, நசா்வநாகாம்பிகை ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், கலசாபிஷேம், சிறப்பு அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. அம்மனுக்கு வளையல் காப்பு, மகா தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் அம்மன் அலங்காரத்துக்காக வளையல்களை வாங்கிவந்து வழங்கினா். அவா்கள் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு வழிபட்டனா்.