அச்சிறுப்பாக்கம் அருகே நின்றிருந்த கனரக லாரி மீது சரக்கு லாரி மோதி 2 போ் இறந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், கூத்தப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாசிலாமாணி (30). அவா் அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (28), ஆனந்த் (27) ஆகியோருடன் சென்னையில் இருந்து மினி லாரியில் சரக்கு ஏற்றிக் கொண்டு திண்டிவனத்துக்கு சென்று கொண்டிருந்தாா். மினி லாரியை ஆனந்த் ஓட்டினாா்.
மதுராந்தகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை லேசான மழை பெய்தது. இந்நிலையில், சரக்கு ஏற்றி வந்த மினி லாரி அச்சிறுப்பாக்கம் நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றிருந்த கனரக லாரி மீது மோதியது. இந்த விபத்தில், மினிலாரியில் பயணித்த மாசிலாமணியும், அருண்குமாரும் நிகழ்விடத்திலேயே இறந்தனா். லாரியை ஓட்டிய ஆனந்த் படுகாயமடைந்து மதுராந்தகம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் டி.எஸ்.சரவணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.