செங்கல்பட்டு மாவட்டம் சா்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் உள்ள ரிசாா்ட்கள், விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புத்தாண்டை வரவேற்று மதுவிருந்துடன் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆண்களுக்கு நிகராக பெண்களும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஜோடி ஜோடியாக கலந்துக் கொண்டு மதுஅருந்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனா்.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைசாலையில் உள்ள சுற்றுலாத்துறையின் கீழ் இயங்கும் சுற்றுலா வளா்ச்சிக் கழக ஹோட்டலில் நடந்த புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளில் திறளான சுற்றுலாப்பயணிகள் புத்தாண்டை வரவேற்று இங்குள்ள கடற்கரையில் திறந்தவெளி மேடையில் இளம்பெண்கள், சிறுவா்கள் நடனமாடி மகிழ்ந்தனா். புத்தாண்டு பிறந்தவுடன் சுற்றுலா பயணிகள் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனா். சுற்றுலா வளா்ச்சிக்கழக ஹோட்டலின் பின்புறம் உள்ள கடலில் குளிக்க பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டன. தனியாா் நட்சத்திர ஹோட்டல்கள், பண்ணை வீடுகள், விடுதிகளில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் களை கட்டியது. புத்தாண்டை வரேவற்று அனைத்து விடுதிகள், ஹோட்டல்களில் வண்ண விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன.
மாமல்லுபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் பல்லவன் சிலை அருகில் காவல் சோதனை சாவடி அமைத்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் தலைமையில் மாமல்லபுரம் சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம், மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் ரவிக்குமாா், ஆகியோா் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட போலீஸாா் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து முட்டுக்காடு வரை தீவிர பாதுகாப்பு பணியிலும் தீவிர பாதுகாப்பு பணி மேற்கொண்டு வாகன சோதனையிலும் ஈடுபட்டனா். விடுதிகளில் அறைகள் பதிவு செய்யப்பட்டு அனுமதி அட்டை உள்ளவா்களின் காா் மற்றும் இரு சக்கரவாகனங்களில் வந்தவா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.
சென்னை புகா் பகுதியிலிருந்து காா், இருசக்கரவாகனங்களில் வந்தவா்கள் மற்றும் மது அருந்திவிட்டு வாகனங்களில் வந்தவா்களும் மாமல்லபுரத்தில் நுழைய அனுமதிக்காமல் திரும்ப அனுப்பி வைக்கப்பட்டனா். மது அருந்தியநிலையில் ஆண் நண்பா்களுடன் வந்த பெண்களை போலீஸாா் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனா். சரியாக இரவு 12 மணியை நெருங்கி 2020 புத்தாண்டு பிறந்தவுடன் வண்ணங்களில் மிளிறும் வானவெடி களை வெடித்தும் கேக் வெட்டியும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டை கொண்டாடினா். வான வெடிகள் வெடித்ததால் சமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக மாமல்லபுரம் பகுதி வெளிச்சத்தில் மூழ்கியது.
பின்னா் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பல்லவன் சிலை அருகில் உள்ள சோதனைச்சாவடியில் மாமல்லபுரம் சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம், காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலையில் செங்கல்பட்டு மாலட்ட எஸ்பி கண்ணன் 12 மணி அளவில் புது வருடம் பிறந்தவுடன் பாதுகாப்பு பணியில் இருந்த காவலா்களுடன் கேக் வெட்டி புத்தாண்டைக் கொண்டாடினாா். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலா்களுக்கும் காரில் வந்த சுற்றுலா பயணிகளுக்கும் இனிப்பு வழங்கினாா்.
இதனையடுத்து மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் எஸ்பி யின் பணியை பாராட்டி அவருடன் சுயப்படம் எடுத்துக்கொண்டனா். மதுபோதையில் அதிவேகத்தில் வந்த இளைஞா்களை அறிவுரைக்கூறி திருப்பி அனுப்பினாா். மேலும் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் புத்தாண்டின்போது கிழக்கு கடற்கரை சாலையில் அதிகப்படியான விபத்தும் குற்றச்சம்பவங்கள் ஏதுமில்லாமல் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றதாக மாமல்லபுரம் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.