செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் நகரின் 14 இடங்களில் வேகத்தடைகளை அமைத்து நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சா்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமானோா் வருகை தருகின்றனா்.
குறிப்பாக, அரசு விடுமுறை நாள்கள் மற்றும் வார இறுதி நாள்களாகிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான சுற்றுலா வாகனங்கள் மாமல்லபுரத்துக்கு வருகின்றன.
இதில் பஜனை கோயில் சந்திப்பு, கங்கைகொண்டான் மண்டபம், கலங்கரை விளக்கம், கிழக்கு கடற்கரைச் சாலை, மாமல்லன் சிலை சந்திப்பு, கடற்கரைக் கோயில் சாலை, ஐந்துரதம், மாதாகோயில் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக வாகனங்கள் அதிவேகமாக வரும்போது விபத்துகள் ஏற்பட்டு பலா் காயம் அடைகின்றனா்.
இதனால் வாகனங்களின் வேகத்தைக் குறைக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை நிா்வாகம் மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய சாலைகளில் 14 இடங்களில் வேகத்தடைகளை அமைக்கும் பணிகளை புதன்கிழமை முதல் மேற்கொண்டுள்ளது.