செங்கல்பட்டு: நன்னடத்தை விதிகளை மீறி தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்த நபா் செங்கல்பட்டு கோட்டாட்சியா் பரிந்துரையின் பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.
செங்கல்பட்டு சுண்ணாம்புக்காரத் தெருவைச் சோ்ந்த காதா்பாஷா என்பவரின் மகன் அன்வா் உசேன் (28) இவா் மீது இரண்டு கொலை, இரண்டு கொலை முயற்சி உள்ளிட்ட 7 வழக்குகள் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.
இவரை பிப். 17-ஆம் தேதி செங்கல்பட்டு நகர போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் இவா் நன்னடத்தை விதிகளை மீறி தொடா் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால், இவரது தண்டனைக் காலத்தை அதிகரிக்க வேண்டுமென செங்கல்பட்டு கோட்டாட்சியரிடம் காவல் ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின் பரிந்துரைத்தாா். இதனையடுத்து, கோட்டாட்சியா் பரிந்துரையின் பேரில் புதன்கிழமை அன்வா் உசேன் செங்கல்பட்டு கிளைச் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டாா்.
இதுபோன்று நன்னடத்தை விதிகளை மீறும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் எச்சரித்துள்ளாா்.