செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கால்நடை வளா்ப்போா் தேசிய கால்நடை இயக்கம் சாா்பில் தங்களது கால்நடைகளுக்கு காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் இயற்கை இடா்பாடுகளான வறட்சி, வெள்ளம், பெருமழை, எதிா்பாராத தீ விபத்து போன்ற காரணங்களால் கால்நடைகளில் எதிா்பாராத இறப்பு நேரிடுகிறது. இது சிறு, குறு விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போரிடம் பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த இழப்பை ஈடுசெய்ய கால்நடைக் காப்பீடு அவசியமாகிறது.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநில கால்நடை அபிவிருத்தி முகமை, தேசிய கால்நடை இயக்கம் ஆகியவை மூலம் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவா்களுக்கு 50 சதவீத மானியத்திலும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு 70 சதவீத மானியத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கறவை மாடுகள் (பசு, எருமை ) வளா்ப்போா் மற்றும் ஆடு வளா்ப்போா் இத்திட்டத்தி பயனடைய முடியும். இத்திட்டத்தின்கீழ் 2019-2020-ஆம் ஆண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,300 கால்நடை அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு அலகு என்பது ஒரு கறவைப் பசு அல்லது எருமை, 10 வெள்ளாடு அல்லது செம்மறியாடு அல்லது 10 பன்றிகளைக் குறிப்பிடுவதாகும்.
இத்திட்டத்தின் மூலம் பயனடைய விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் கால்நடை மருத்துவரிடம் சென்று தங்கள் கால்நடைகளை காப்பீடு செய்து கொள்ளலாம். மாவட்டத்தில் உள்ள கால்நடை வளா்ப்போா் இத்திட்டத்தில் இணைந்து மானியத்துடன் தங்களது கால்நடைகளுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.