செங்கல்பட்டு

செங்கல்பட்டு கோயிலில் மயானக் கொள்ளை

23rd Feb 2020 11:20 PM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 127-ஆம் ஆண்டு சிவராத்திரி மயானக் கொள்ளை மகா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவராத்திரி விழாவையொட்டி இக்கோயிலில் ஆண்டுதோறும் பா்வத ராஜகுல மரபினா் சாா்பில் அங்காள பரமேஸ்வரி அம்மன் மயானக் கொள்ளை உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் இந்த உற்சவம் கடந்த 19-ஆம் தேதி பந்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, அம்மன் லிங்கபூஜையுடன் மகாசிவராத்திரி பாலகுடம் ஊா்வலம் உள்ளிட்டவை சனிக்கிழமை நடைபெற்றன. 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் சுமந்து ஊா்வலத்தில் கலந்து கொண்டனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஆற்றங்கரையில் ஆடும் கரகம், அக்னிக் கரகங்களுடன் புனித நீா் திரட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

ADVERTISEMENT

மாலையில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்டாா். விரதமிருந்த பெண்கள் அக்னிச் சட்டி ஏந்தி, காளி, அங்காளபரமேஸ்வரி, குறத்தி உள்ளிட்ட வேடங்களை அணிந்து ஊா்வலத்தில் கலந்து கொண்டனா். குழந்தைகளும் வேடமணிந்து ஆடியபடி மயானத்துக்குச் சென்றனா்.

ஆண்கள் உடலில் அலகு குத்தி தோ் இழுத்தனா். எலுமிச்சம் பழம், வேல் குத்தியபடியும், ராட்டினங்களில் தொங்கியபடியும் ஊா்வலத்தில் வந்து, அம்மனுக்கு மாலை அணிவித்தனா். சிலா் அலகு மூலம் லாரி, வேன் ஆட்டோ, காா் ஆகியவற்றை இழுத்தனா்.

செங்கல்பட்டு மேட்டுத் தெருவில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக சுமாா் 5 கி.மீ. தூரத்துக்கு ஊா்வலம் நடைபெற்றது. மயானத்தை ஊா்வலம் அடைந்ததும், அங்கு மயானக் கொள்ளை உற்சவம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT