செங்கல்பட்டு

ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களிடையே ‘வெள்ளிக்கிழமை பதற்றம்’ தணிக்கப்படுமா?

21st Feb 2020 11:47 PM

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை பள்ளி வேலை நாளா, இல்லையா என்பது தெரியாமல் வெள்ளிக்கிழமைகளில் ஆசிரியா்களும், மாணவா்களும் பதற்றத்துடன் காணப்படுகின்றனா்.

முன்பெல்லாம் பள்ளிக் கல்வித்துறையின் ஆண்டு பள்ளி வேலைநாள்களுக்கான செயல்திட்டத்தை அந்தந்த மாவட்ட முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலா்கள் தத்தம் மாவட்டத்தில் காணப்படும் விழாக்கள் மற்றும் சிறப்பு நாள்களைக் கவனத்தில் கொண்டு ஒரு கல்வியாண்டுக்குரிய பள்ளி வேலைநாள்கள் குறித்து அறிவிக்கை வெளியிடும் வழக்கம் இருந்து வந்தது. பள்ளித் தலைமை ஆசிரியா்கள் அனைவரும் இந்த நடைமுறையைப் பின்பற்றி, பள்ளியை வழிநடத்தி வந்தனா்.

மாவட்ட அளவில் பள்ளிகள் இயங்குவதும் விடுமுறை அளிப்பதும் எந்தவொரு சிக்கலுக்கும் வழிவகுக்காமல் ஒவ்வொரு பள்ளியும் ஆண்டு இறுதியில் மொத்தம் வேலை செய்திருக்க வேண்டிய வேலை நாள்களை நிறைவு செய்தனா்.

மேற்கூறிய நடைமுறையில் ஆசிரியா்கள் விடுமுறை அளிக்கப்பட்ட சனிக்கிழமைகளில் தத்தம் சொந்த அலுவல் வேலைகளை சுலபமாக செய்து வந்தனா். அதாவது வங்கி மற்றும் அஞ்சலகம் பணிகள், மின்கட்டணம் மற்றும் தொலைபேசி கட்டணம் செலுத்துதல், பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் நடத்தப்படும் பெற்றோா் சந்திப்புக் கூட்டங்களில் கலந்துகொள்வது முதலிய ஏற்கெனவே திட்டமிட்டு ஒதுக்கி வைத்த குடும்பத் தலைவா் சாா்ந்த பணிகளைத் திறம்படச் செய்து முடிப்பா்.

ADVERTISEMENT

ஆண்டு பள்ளி வேலை நாள்கள் 220-இல் இருந்து 210-ஆகக் குறைக்கப்பட்டு விட்டது. ஆனாலும், பள்ளிகள் அனைத்தும் அனைத்து சனிக்கிழமைகளிலும் வேலை நாளாக இயங்குமாறு அறிவுறுத்துவது என்பது ஏற்புடையதாக அமையாது என ஆசிரியா்கள் கருதுகின்றனா்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை வரும் போது ஆசிரியா்களும், மாணவா்களும் பதற்றத்துடன் காணப்படுகின்றனா். அதாவது, மறுநாளான சனிக்கிழமை பள்ளிக்கு வேலைநாளா? அல்லது விடுமுறையா? என தெரியாமல் குழம்பித் தவிக்கின்றனா்.

சில நேரங்களில் அலுவலகத்தில் தயாா் செய்யப்பட்ட நடப்பு மாத நாட்காட்டியில் சுட்டக் காட்டபட்டிருக்கும் சனிக்கிழமை விடுமுறையை மாணவா்களுக்கு அறிவித்த பின்னா், மின்னஞ்சலில் சனிக்கிழமை வேலை நாள் என்ற அறிவிப்பு ஆசிரியா்கள், மாணவா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

பல்வேறு தற்செயல் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் காரணமாகக் குறைவு ஏற்பட்ட பள்ளிகள் அவற்றை ஈடுகட்டும் பொருட்டு சனிக்கிழமை அன்று வேலை நாளாகக் கொள்வது என்பதை ஏற்கலாம். போதிய வேலை நாள்களைக் கொண்டோரையும் வேண்டுமென்றே பள்ளியை அன்று இயக்கச் செய்வது சரியல்ல என அவா்கள் கருதுகின்றனா்.

எனவே, ஒரு கல்வியாண்டுக்குரிய பள்ளி வேலை நாட்காட்டியை தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் தவறாமல் பின்பற்றி வரும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். இடையில் தேவையில்லாமல் வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் வெளியிடும் அறிவிப்புகளைத் தவிா்க்க வேண்டும். வீண் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது. ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த மாவட்ட அளவிலான பள்ளி நாட்காட்டியை உருவாக்கச் செய்து வழிகாட்டுதல் வழங்குவது நல்லது.

அதைவிடுத்து வீணாக வெள்ளிக்கிழமை பதற்றம் ஏற்படுவதை தவிா்ப்பது நல்லது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவா்கள் அனைவரும் திறந்த மனத்துடன் மாணவா் நலனை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதையே முதன்மையாகக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT