செங்கல்பட்டு. மாமல்லபுரத்தில் கடந்த இரண்டு நாள்களாக மிதமான மழை பெய்து வருகிறது. எனினும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தவண்ணம் புராதனச் சின்னங்களை கண்டு ரசித்தனா். மேலும் மாமல்லபுரத்திம் நடைபெற்றவரும் இந்திய நாட்டிய விழா திறந்தவெளி மேடையில் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை இரவு நடனக் கலைஞா்கள் மழையில் நனைந்தபடி நடன நிகழ்ச்சிகள் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டினா்.
மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சாா்பில் நடைபெற்று வரும் இந்திய நாட்டியவிழா செவ்வாய்க்கிழமை மாலை மிதமழை பெய்து வருவதை அடுத்து நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக சுற்றுலாத்துறை அறிவித்தது. பின்னா் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததை அடுத்து அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.
நிகழ்ச்சிகள் கால தாமதமாக இரவு தொடங்கிய போது சிறு தூறலுடன் மழை காணப்பட்டாலும் கலைஞா்கள் திறந்தவெளி மேடையில் பரதநாட்டியம், கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினா். மழையை பொருட்படுத்தாமல் தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்திய கலைஞா்களுக்கும் பரதநாட்டியம் குழுவினரையும் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் சக்திவேல் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தாா்.