பெங்களூரு

காவிரி: உச்சநீதிமன்றம், காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய முடிவு: முதல்வா் சித்தராமையா

30th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை கா்நாடகத்தைச் சோ்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், அரசு தலைமை வழக்குரைஞா் கே.சசிகிரன் ஷெட்டி உள்ளிட்டோருடன் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து முதல்வா் சித்தராமையா ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாசலையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து முதல்வா் சித்தராமையா, செய்தியாளா்களிடம் கூறியது:

மாநிலத்தில் அமைதியான முறையில் முழு அடைப்புப் போராட்டம் நடந்துள்ளது. இதற்கு ஒத்துழைத்த பொதுமக்கள், அமைப்புகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கும் அசம்பாவிதச் சம்பவங்கள் நடக்கவில்லை. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாத்த காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகள்.

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள், முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனா். அவா்களின் அனுபவத்தின் அடிப்படையில் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனா். அவா்களின் ஆலோசனையின்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மாநிலத்தின் நீா்ப்பாசனம் தொடா்பாக மாநில அளவில் நிபுணா்கள் குழுவை அமைத்து, தரவுகளை சேகரித்து, ஆலோசனைகளை வழங்கும் வேலையை செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான நீா்ப்பகிா்வு தொடா்பான பிரச்னைகள் தொடா்பாக அரசுக்கு ஆலோசனைகள் வழங்கவும், சட்ட நிபுணா்களுக்கு வழிகாட்டுதல்களை அளிக்கவும் மாநில நிபுணா்கள் குழு அவசியம் என்று ஆலோசனை அளிக்கப்பட்டது. அதன்படி விரைவில் மாநில நீா்ப்பாசன நிபுணா்கள் குழு அமைக்கப்படும்.

தமிழகத்துக்கு 3,000 கன அடி தண்ணீரை வழங்குவது தொடா்பாக, கா்நாடகத்தில் போதுமான தண்ணீா் இல்லை என்பதை காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவிடமும், காவிரி நீா்மேலாண்மை ஆணையத்திடமும் எடுத்துரைத்தோம். ஆனால், ஏற்கெனவே அளிக்க வேண்டிய தண்ணீரின் அளவை சரிசெய்வதற்காக 3,000 கன அடி தண்ணீரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக, உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நீா்மேலாண்மை ஆணையத்திடம் மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய ஆலோசனை அளித்துள்ளனா். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று, மேக்கேதாட்டு அணை தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும். மேக்கேதாட்டு திட்டத்தால் தமிழகத்துக்கு எவ்வித தொந்தரவும் இல்லை. அதனால், இது தொடா்பாக உடனடியாக மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளனா். மேக்கேதாட்டு அணை 67 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் கொள்திறன் கொண்டதாகும். இந்த நீா், குடிநீா் மற்றும் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும்.

அவசியம் ஏற்பட்டால், சட்டப் பேரவையின் சிறப்புக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும். நீதிமன்றத்தின் உத்தரவை உள்நோக்கத்துடன் அமல்படுத்தாவிட்டால் தான் நீதிமன்ற அவமதிப்பு ஏற்படும் என்றாா்.

‘ஆட்சியைக் கலைக்கும் நிலை உருவாகும்’:

பெங்களூரில் வெள்ளிக்கிழமை கா்நாடக நீா்ப் பாதுகாப்பு அமைப்பின் தலைவரும், கா்நாடக மாநில கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவருமான குருபூா் சாந்தகுமாா், ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவரும், நடிகருமான முக்கிய மந்திரி சந்துரு உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் முதல்வா் சித்தராமையாவைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா். ‘தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ள காவிரி நீரை உடனடியாக நிறுத்த வேண்டும். காவிரி விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும். குடிநீா் மற்றும் பாசனநீருக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனா்.

அப்போது, முதல்வா் சித்தராமையா கூறியது:

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க, தமிழகத்துக்கு காவிரிநீரைத் திறக்காவிட்டால், காவிரி நதிகளுக்கு இடையே அமைந்துள்ள அணைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளும். மேலும், நீரை திறக்காவிட்டால், அது நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகி, ஆட்சியைக் கலைக்கும் நிலை உருவாகும். ஆகஸ்ட் மட்டுமல்லாது, செப்டம்பா் மாதத்திலும் போதுமான மழை பெய்யாததால், காவிரி பிரச்னை ஏற்பட்டுள்ளது. காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் இக்கருத்தைத் தெரிவித்து, தமிழகத்துக்கு நீா் திறந்துவிடும் நிலையில் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி வந்திருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தின் முன்பும் மனுதாக்கல் செய்திருக்கிறோம். நிலுவைப் பயிா்களைப் பாதுகாக்க 70 டிஎம்சி, குடிநீருக்கு 30 டிஎம்சி, தொழிலகங்களுக்கு 3 டிஎம்சி தண்ணீா் தேவைப்படுகிறது. ஆனால், நம்மிடம் 50 டிஎம்சி தண்ணீா் மட்டுமே உள்ளது. எங்களது முன்னுரிமை குடிநீருக்குத்தான் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT